பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

199

விவரங்களைக் கூறாமல் எத்தனை நாட்கள் இரகசியமாக வைத்திருக்க முடியும்?.

தாய்-தந்தை இவளை மண்ணில் விட்டார்கள் வளர்ந்தவர், உனக்குச் சகலமும் நாயகனே என்று தாரைவார்த்துக் கொடுத்தார். அவரோ உன் பந்தம் வேண்டாம் என்று வனத்துக்கனுப்பிக் கை கழுவிக் கொண்டார்.

இவள் தன் வயிற்றில் பேணி வளர்த்தாலும், குமரப்பருவத்து எழுச்சியில், அரும்பி மலருவது, அந்த வித்தின் பெளருசம்’ அல்லவோ? குதிரையின் வாலைப் பற்றிக் கொண்டு அடிபணிந்து போய்விடுவார்களோ? உடல் நினைக்கவே நடுங்குகிறது.

அந்நாள் கானகத்தில் இவள் நிராதரவாக விடுபட்ட போது இவளை முத்தை ஏந்தும் சிப்பிபோல் காத்துக் கொண்டுவந்தாரே, அந்த நந்த முனி என்ன சொல்வார்!

எது நீதி? எது அநீதி?

அவள் முதியவளுக்கு இலைக் கிண்ணத்தில் கூழ் கொண்டு வந்து வைக்கிறாள். கிழங்குக்கூழ். ஒரு துண்டு இனிப்புக்கட்டியும் வைத்துவிட்டு,

“அம்மா, நான் இப்போது, சத்தியமுனிவரையும் நந்த சுவாமியையும் பார்த்து விட்டு வருகிறேன். போகும் போது புல்லியோ, கும்பியோ தென்பட்டால் இங்கே வந்து இருக்கச் சொல்கிறேன். வரட்டுமா?” என்று நிற்கிறாள்.

அப்போது, கூட்டமாகத் தேனெடுக்கச் சென்ற பிள்ளைகள் வரும் கலகலப்புக் கேட்கிறது. மரங்களுக்கும் புதர்களுக்கும் இடையில் அவர்கள் ஆடிப்பாடி வரும் அசைவுகள் தெரிகின்றன.

அதற்குள்ளாகவா தேனெடுத்து வந்து விட்டார்கள்? எந்தெந்தக் காட்டுக்கெல்லாமோ சென்றலைந்து இரவில் எங்கேனும் உறங்கிவிட்டு மறுநாள் பகலிலோ, மாலையிலோ தானே திரும்புவார்கள்?.

அவர்களை எதிர் கொள்ள பூமகள் விரைகிறாள்.