பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

21

“சுவாமி, எத்தனை நாட்கள்! தாங்கள் அன்று கண்ட வடிவமாகவே இருக்கிறீர்கள். என் மனம் சஞ்சலப்படும் நேரத்தில் சஞ்சீவியாக வந்தீர்கள். இந்த இடம் பேறு பெற்றது சுவாமி!... ஓ, கங்கைக்கரையிலும், தண்டகாரணியத்திலும், சிறையிருந்த அரக்கர் மாளிகையை ஒட்டிய சோலைகளிலும், எத்தனை முறைகள் தாங்கள் வந்துவிடமாட்டீர்களா என்று நெஞ்சு ஏங்கியது!... சுவாமி, வாருங்கள்...”

தன்னை மறந்து, பூம்பந்தலின் பக்கம் இருக்கும் நீர்க்கலத்தில் இருந்து நீர் மொண்டு வருகிறாள். பூம்பந்தரின் மேடையில் சருகுகளை அகற்றி இருக்கையைச் சித்தமாக்குகிறாள் அவந்திகா. நடந்து நடந்து மெலிந்து புழுதி படிந்த பாதங்களைக் கழுவ, பொற்றாலம் வருகிறது. பூமகள் அந்தப்பாதங்களைக் கழுவும் போது, அவர் கண்கள் கசிகின்றன. புன்னகையுடன் அவள் உச்சியில் கை வைத்து ஆசி மொழிகிறார். “தாயே, என் பாவங்கள் கழுவப் படுகின்றன, என் அன்னையால்... நீ பூமகள், பூதலத்தின் அன்னை ...”

“இமயத்தின் மடியில், கங்கை பெருகிவரும் சரிவுகளில் பனிபடர்ந்த சூழலில் பலகாலம் இருந்துவிட்டேன். இந்த மகளின் நினைவு, இந்த அன்னையின் நினைவு, என்னை உந்தித்தள்ளிக் கொண்டு வந்துவிட்டது. பல செய்திகள் கேள்விப்பட்டேன் அம்மா!”

அவர் குரல் கரகரக்கிறது.

அவள் துணுக்குறுகிறாள்.

‘அரண்மனை வாயிலில் மன்னரின் காவலர் தடுத்தனரோ? அதனால் தான், பின்புறம் கானகத்து வழியில் அந்தப்புரச் சோலையினூடே வருகிறாரோ?’ பேதை இப்படியே நினைத்துக் குறுகி நிற்கிறாள்.

“நான் மன்னரையோ, அரசியையோ பார்க்க வரவில்லையே? எனக்கு அயோத்தியின் மாமன்னர் அவையில் வந்து நிற்பதற்குத் தகுதியான புலமையோ, ஆன்மிக - வேதாந்தங்களில் வல்லமையோ, இல்லையம்மா! வேதபுரி அரண்மனைத் தோட்டத்தில்,