பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

வனதேவியின் மைந்தர்கள்

தானியம் புடைக்கும் பூமகள், தேய்த்த பால் மணியரிசியை அந்தக் குழந்தையிடம் கொடுக்கிறாள். பூரு, சிரித்துக் கொண்டே வாங்கித் தின்னும் அழகை மகிழ்ச்சியைப் பார்க்கிறாள்.

அப்போது, சிரித்துக்கொண்டேபால்கிழங்குகள் சருகுப்பை நிறையச் சுமந்து கொண்டு வந்து போடுகிறாள், அதன் அன்னை.

“தீனியா? எப்போதும் வாய் அரைபடுகிறது! இதுதான் இதற்கு யாகம்..” என்று சொல்லி எச்சில் பதியும் முத்தமொன்று அதன் கன்னத்தில் வைக்கிறாள். பூமகளுக்கு ராதையின் நினைவு வருகிறது. தாய் மக்கள் என்ற இயல்பான கசிவுகள் கூட வறண்டு ஊசிக் குத்தல்களாகும் அரண்மனை உறவுகள்.

“வனதேவி! பெரியம்மா, படுத்தே கிடக்கிறாரே? ஏதேனும் கஞ்சி குடித்தாரா?.”

பூமகள் உதட்டைப் பிதுக்குகிறாள்.

இந்த ஆசிரமத்தின் வாயிலில் வரிசையாக அசோக மரங்கள் எழும்பியிருக்கின்றன. இவற்றைச் சிறு பதியன்களாக வைத்த நாட்களை பூமகள் அறிவாள். அவள் பிஞ்சுப் பாலகர்கள் கையால் முனிவர் நடச் செய்தார். அந்த மரங்கள் குளிர்ச்சியான இலைகளுடன் இருண்ட மேகம் போல் கவிந்து இடைஇடையே செங்கொத்து மலர்களுடன் மிக அழகாக இருக்கின்றன. மரத்தில் பறவைகள் வந்து தங்குகின்றன. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துப் பாதுகாக்கின்றன. வேனிலின் வெம்மையே இல்லை. பின்புறமுள்ள தாமரைக் குளத்தில் நீர் படிகமாகத் தெரிகிறது. கேகயத்து மாதாவுக்குக் குளக்கரையும், தோப்பும் மிகவும் உவப்பாக இருக்கின்றன. பூருவின் தாய் குந்தி, இன்று பல செய்திகளைப் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

முற்றத்தில் அவற்றைச் செவிமடுத்துக் கொண்டே தனக்குள் சிரித்தவளாய், பூமகள் தானியம் உலர வைக்கையில் பேச்சுக் குரல் கேட்கிறது.

அவள் முற்றத்து ஒரம் நடைபாதையில் காவலர், குடை, வருவதைப் பார்க்கிறாள். உடலிலும் உள்ளத்திலும் ஒரு சிலிர்ப்பு