பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

வனதேவியின் மைந்தர்கள்

“தாயே தாங்கள் சாந்தமடைய வேண்டும். தமையனார், சக்கரவர்த்தி, க்ஷத்திரிய தர்மம் மீறி எந்தச் செயலையும் செய்யவில்லை. குடிமக்களின் அவநம்பிக்கையை அகற்ற வேண்டியது அரச தருமம்.”

“இந்த அரச தருமம் நிறை சூலியை வனத்தில் விட்டுவரச் செய்யும். அத்தகைய அரச தருமத்தில் எங்களுக்கு ஏது இடம்? இந்தத் தரும உரையாற்றத்தான் அண்ணனும் தம்பியும் வந்திருக்கிறீர்களா?”

“மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன், தாயே, மன்னரின் ஆணையை நிறைவேற்ற வேண்டிய நிலையில் நான் எப்போதும் இருக்கிறேன். எனக்கென்று தனியான விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.”

பூமகள் அவர்களை மறைவாக நின்று பார்க்குமிடம் தேடி நிற்கிறாள். இளையவன்தான். அந்தக் காலத்து இளமையின் செறிந்த முகம் வாடியிருக்கிறது. முடியும் உடலும் மாசுபடிந் திருக்கின்றன. வில்-அம்பு இல்லாமல் வெறும் மேலாடை போர்த்திய மேனி. கீழ் நோக்கிய பார்வை.

சத்திய முனிவர் அங்கு வந்து, தேவியும் மைந்தர்களும் வனத்தில் வாழ்வதைத் தெரிவித்து, அவர்கள் அங்கு இருக்கையில் வெறும் பொற் பிரதிமையை வைத்து வேள்வி செய்வது தருமம் அன்று என்று எடுத்துரைத்தாராம். இது யுகயுகத்துக்கும் சக்கரவர்த்தித் திருமகன் பெயருக்குக் களங்கம் விளைவிக்குமே ஒழிய, புகழ் பரப்பாது என்றும் அறிவுறுத்தினாராம். மன்னர் தம் அமைச்சர், குலகுரு ஆகியோரைக் கலந்தாலோசித்தபோது, அவர்கள் இந்த யோசனை கூறினார்களாம்.

அவன் அந்த யோசனையைப் பற்றி எதுவும் முத்துத் தெறிக்குமுன், கேகயத்து அன்னையின் குரல் அனலில் காய்ந்த வெம்மையுடன் வெளிப்படுகிறது.

“என்ன யோசனை? பிள்ளைகள் வயிற்றில் இருக்கும்போது அக்கினிப்பிரவேசம் தகாது; வனத்துக்கு விரட்டினீர்கள்.