பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வனதேவியின் மைந்தர்கள்

“சோறுண்ட பின் பழம்.....”

அந்தப் பழம். மேலெல்லாம் மேடும்பள்ளமாக பச்சையாக இருக்கும். சில சமயங்களில் வெடித்து உள்ளே சதை தெரியும். வெண்மையான சதை. அதில் வெண்ணெயும் தேனும் கலந்த ருசியுடன் - சோறு, நடு நடுவே கருமையான கொட்டைகள். ஒரு கனியில் பத்துப்பதினைந்து கொட்டைகள் இருக்கும்.

தின்று முடியுமுன் பூமகளின் இதழ்கள், கன்னங் களிலெல்லாம் அந்தச் சோறு ஒட்டியிருக்கும். குளத்துப்படியில் வைத்து அவள் வாயைக் கழுவுவார்கள். அந்தக் கொட்டை களையும் கழுவுவாள். எண்ணெய் தடவினாற் போன்று பளபள வென்று, வழுவழுப்பாக இருக்கும்.

பிறகு கல்பாவியதரையில் அந்த விதைகளை ஒரு கோலமாக வைப்பார்கள். அன்றும் இந்த விளையர்ட்டை ஆடுகையில், பெரியம்மா, வண்ண வண்ணச் சிறுமலர்களைப் பறித்து வந்து விதைக்கோட்டை வடிவுக்கு உயிரூட்டினாள்.அழகிய தாமரைப்பூ உருவாயிருந்தது. புற்களில் பூத்திருந்த ஊதா நிறச் சிறு பூக்களைக் கொண்டு வந்து அந்தப் பெரிய தாமரையை உருவாக்கினாள்.

அப்போது திடீரென்று அவள் கேட்டாள்.

“பெரியம்மா? நீங்கள் அரக்கரா?”

அவர் ஒரு கணம் திகைத்ததும் நினைவில் உயிர்க்கிறது.

“அப்படி ஒன்றும் கிடையாது குழந்தை! எல்லாரும் மனிதகுலம்தான்...”

“அரக்கர்களுக்கு நரமாமிச ஆசை வந்து, கோரைப்பற்களும் குரூரவடிவமும் வந்து விடுமாம். அப்போது அவர்கள் அழகான பெண்கள் போல் வந்து குழந்தைகளைத் துக்கிச் சென்று ஒடித்து, கடித்துத் தின்பார்களாம். சுரமை இல்லை, சுரமை? அவள் சொன்னாள். அவளுடைய அம்மா அப்படிச் சொன்னாளாம். சுரமை எங்களுடன் விளையாடுவாள். மணிக்கல்லை மேலே போட்டு கீழே மூன்று தட்டு தட்டும் வரை அது கீழே வராமலிருக்கும்....”