பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

51


“அப்படி எல்லாம் இல்லை குழந்தை, முன்பு எப்போதோ அப்படி மனிதர்களும் ஒநாய், புலிகள் போல் பற்களுடன் பிறந்திருப்பார்கள். ஏனெனில், அப்போது, உணவைச் சமைத்துச் சாப்பிட அவர்களுக்குத் தெரியவில்லை. பிறகு மனிதர்கள் அறிவால் எத்தனையோ கற்றுக் கொண்டு விட்டார்கள். தானியங்கள், நெய், தேன், பால் எல்லாம் நமக்குக் கிடைக்கின்றன. அதனால், யாருக்கும் அப்படிக் குரூரம் வராது. வேறு வேறு வடிவம் எடுக்க முடியாது. வேடம் போட்டுக் கொண்டு நாடகம் தான் ஆடுவார்கள். அதுவும், பெண்கள் அரக்கியர்கள் வடிவம் மாறி குழந்தைகளைத் தூக்கிச் சென்று தின்பதெல்லாம் முழுப் பொய். ஏன் தெரியுமா?”

ஏன்?...”

“அவள் பெரியவளாவாள், அவளை ஒரு நல்ல மனிதன் திருமணம் செய்து கொள்வான். அன்போடு இருப்பார்கள். அப்போது அவளும் கருப்பம் தரிப்பாள். அவள் வயிற்றில் ஒரு குழந்தை உயிர்க்கும். அவள் உலகம் முழுவதையும், அன்பாய், தாய் போல் நினைப்பாள்...”

அவளுக்கு நீரின் வெம்மையில் உடல் முழுதும் ஒரு பரவசச் சிலிர்ப்பு பரவுகிறது.

‘அம்மா! உனக்கு நான் வயிற்றில் இருக்கும்போது, இப்படி உணரவில்லையா? ஏன்? உலகம் முழுவதையும் தாங்கும் தாய் போன்ற பரிவு வரவில்லையா? ஏன்? அதனால்தான் பூமியில் விட்டாயோ?...’

இன்னொரு நாளின் நினைவு உள்ளத்திரையில் படிகிறது.

ஊர்மி, சுதா, சுரமை, எல்லோருடனும் கண்ணாமூச்சி ஆடினார்கள். முதிய சண்டி அவள் கண்களைப் பொத்திக் கொண்டிருந்தாள்.

அப்போது, பெரியம்மா தோட்டத்துக்கு வந்து விட்டார். முரட்டுச் செருப்பொலி கேட்டதுமே, சண்டியின் பிடி தளர்ந்தது.