பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வனதேவியின் மைந்தர்கள்

அவள் எழுந்து செல்கிறாள். கிளியின் மூக்குக்கும் கொவ்வைக் கனிகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஒரு கனியைக் கொத்தி உண்ணுகிறது.

“தத்தம்மா? நீயும் கோபிக்கிறாயா? நீ பொய் சொல்லவில்லை. வா?” கிளி மறுபடியும் அவள் தோளில் வந்து அமருகிறது.

“சரி.... மன்னர் எங்கே? பார்த்தாயா?”

“மன்னர்... ஜலஜா...”

“என்ன உளறல்? ஜலஜாவா?” என்று அவள் அதட்டுகிறாள்.

“ஆம் நான் பார்த்தேன். ஜலஜா மன்னர்...”

“எங்கே? நீ மட்டும் பொய் சொன்னால்...?”

அது மெல்லப் பறப்பதும் அவள் தோளில் அமருவதுமாக அழைத்துச் செல்கிறது.

இனம் தெரியாத மனவெழுச்சியில் படபடப்பு உண்டாகிறது. செவிகள் குப்பென்று அடைப்பது போல் இருக்கிறது.

மல்லிகைப் பந்தலின் பக்கம் ஒர் இளங்கதம்பமரம் நிற்கிறது. அதன் கிளைகளில் பறவைகள் அவள் வரவுக்குக் கட்டியம் கூறுபவை போல் காச்மூச்சென்று கத்துகின்றன. கீழெல்லாம் உதிர்ந்த மலர்கள். பறவை எச்சங்கள். சருகுகள். அங்கே சிவப்பாக வெற்றிலைத் தம்பலம் எச்சில். யாரோ துப்பியிருக்க வேண்டும். சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது இந்த இளமரம் புதியது. மல்லிகைப்பந்தல் பழையது.... “இங்கே தான்...”

“இளவரசரா?...”

“மன்னர் உமிழ்ந்தது. அவள் கொண்டுவந்து இங்கே கொட்டினாள்.”

அந்தக் கிளியைப் பற்றி அதட்டத் துடிக்கிறாள்.

ஆனால், கிளி அவளுக்கு மிகுந்த நெருக்கம்.

“தத்தம்மா, மன்னர் உணவுக்கூடத்துக்கு வந்திருக்கிறாரா, பார்?” என்பாள்.