பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வனதேவியின் மைந்தர்கள்

கோலாகலம் நடக்கிறது. பூமகள் கண்களை மூடிக் கொள்கிறாள். இப்போது வலது கண் துடிப்பது போல் இருக்கிறது. இடது கண் துடித்தது: இலங்கைச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது. ஆனால் என்ன? எத்தனையோ கண்டங்கள்; நெருப்புக் குண்டங்கள். அவள் மகிழ்ச்சியின் துளிகளில் நனைந்து தாயாகப் போகிறாள்.ஆனாலும் மகிழ்ச்சி என்ற முழுமையில் அவள் மனம் நனையவில்லை. வாழ்க்கை என்பதே இப்படி மேடு பள்ளங்கள் தானோ? அவள் மாமி மார், அவந்திகா, சாமளி... ஜலஜா...

அவளுக்கு ஏதேனும் கெடுதல் நேர்ந்து விடுமோ? பெண்ணாகப் பிறந்தவள் ஆசை கொள்ளலாகாதா? மன்னரின் இதயத்தைப் பிடித்து, குன்றேற வேண்டும் என்று ஆசை கொண்டது தவறா? ஆனால் அவருக்கென்று ஒரு மனைவியும், அவளுக்கென்று ஒரு நாயகனும் இருக்கையில். என்ன? அவள் ஒருவனின் உடமை. அடிமையானவளுக்கு நாயகனை மீறி நாட்டம் தோன்றுவது சரியல்ல. நாட்டம் தோன்றவில்லை என்றாலும், பத்து மாதங்கள் அவன் நிழலில் இருந்த காரணமே அவளை மாசுபடுத்திவிட்டதே? அந்த சலவைக்காரன் அவளை நெருப்பில் இறக்கி இருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

ஊர்மி கூந்தல் அலைய, காரசாரமாக நெய்யில் பொரித்த இறைச்சித் துண்டத்தைக் கடித்துக் கொண்டு வருகிறாள். அவள் முகத்தில் பளபளப்பு மின்னுகிறது. பொங்கும் மார்பகம் தெரியாமல் தொள தொள வென்று ஒர் இளம்பச்சை ஆடை அணிந்திருக்கிறாள்.

“அக்கா, உனக்கு இனி போகும்போதும் வரும் போதும் முன்னே இருவர் கவரி வீசிவர வேண்டும்” என்று சிரிக்கிறாள்.

சொல்லிவிட்டு, கையில் மீதி இருந்த எலும்புத்துண்டை வீசி ஏறிய, அதை ஒரு காகம் கொத்திச் செல்கிறது.

“அக்கா, மன்னிக்கவும், நான் ஏதேனும் தப்பாகச் சொல்லிவிட்டேனா?”

“இல்லை ஊர்மி, என்னால் இந்த உலக வழக்கங்களைப் புரிந்து கொள்ள, ஒத்துக் கொள்ள முடியவில்லை...”