பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அகத்தியர் யார்? எங்கே?

109


தாகவும், அழைத்து வரும் வழியில் வெள்ளம் காரணமாகக் கோலொன்றின் முனையை அவரைப் பற்றிக்கொள்ளச் செய்து தொல்காப்பியர் அவரை அழைத்து வந்ததாகவும், அதனால் அகத்தியர் அவரைச் சபித்ததாகவும், அவரும் பதிலுக்கு ஆசிரியருக்குச் சாபம் கொடுத்ததாகவும் கதை அமைந்துள்ளது. இக்கதை நல்லாசிரியர் மாணவருக்கு இடையில் இருக்கவேண்டிய அன்பையும் பண்பையும் அகற்றுகின்றதன்றோ? அகத்தியனார் தம் மாணவரைப் பற்றித் தகாத வகையில் எண்ணியிருந்திருப்பாராயின், பின்பு அவர்கள் வழி இலக்கணம் எப்படிப் பிறந்து வாழ்ந்திருக்கக் கூடும்? இக்கதை போன்றவை எல்லாம் தேவையற்றன என ஒதுக்கப்படுதல் வேண்டும்.

மற்றும், தொல்காப்பியத்திலோ, அதன் பாயிரத்திலோ, அகத்தியனாரைப் பற்றிய குறிப்பு ஒன்றும் நாம் பெறவில்லை. பாயிரத்திலோ அரில் தபக் கேட்ட அதங்கோட்டு ஆசான் குறிக்கப்பெறும்போது, அகத்தியர் அத்தொல்காப்பியரின் ஆசிரியராய் இருந்திருப்பாராயின், எப்படி விடப்பட்டிருப்பார்? தொல்காப்பியரை ஐந்திறம் நிறைந்த தொல்காப்பியன்’ எனப் பாயிரம் குறிக்கின்றதே அன்றி, அகத்தியம் நிறைந்த தொல்காப்பியன்’ எனக் குறிக்கவில்லை. ஐந்திறமா, ஐந்திரமா என்னும் ஐயமும் நீங்குதல் வேண்டும். அது பற்றிப் பின்பு ஓரிடத்தில் கூடுமாயின் காணலாம். எனவே, அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் எவ்வாறு தொடர்பு கற்பித்தார்கள் என்பது விளங்காத புதிராய் உள்ளது.

அகத்தியனாரைப் பற்றித் தமிழ் இலக்கியங்கள் வேறொரு கதையையும் சொல்லுகின்றன. தமிழ்நாட்டு வற்றா வளஞ்சுரக்கும் காவிரியே அவர் கமண்டலத்திலிருந்து புறப்பட்டதாம்.

'அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை',