பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வரலாற்றுக்கு முன்


தென்பால் மகேந்திரமலை எனப் பெயரிய மலைத்தொடர் இருந்ததெனவும், அதன் அடியில் பொன் மயமான இலங்கை இருந்ததெனவும் கூறுகின்றது. சிலப்பதிகார அடிகளுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், பஃறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகளுக்கு நடுவே நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன என்பர். அவற்றையே இறையனார் களவியல் உரை குறித்திருக்கலாம். எனவே, இவற்றின் எடுத்துக்காட்டுக்களால் இக்காலத்துக் குமரிமுனைக்குத் தெற்கே ஒரு பெரிய நிலப் பரப்பு இருந்தது என்பது உறுதி. இந்த நிலப்பரப்பிலேயே கபாடபுரம் இருந்து அழிவு பெற்றிருக்கலாம் . அது காலைத் தொல்காப்பியத்தோடு, சில உரைகளில் காணப்பெறும் ஒரு சில இலக்கிய இலக்கண, இசை நூல்களும் பிழைத்திருக்கலாம். காலவெள்ளத்தால் அனைத்தும் கெட, தொல்காப்பியம் இன்றளவும் வாழ்கின்றது எனக் கொள்ளலாம்.

தொல்காப்பியர் காலம் 3000 ஆண்டுகளுக்கு முன்னது என்றும், கடைச் சங்ககாலம் கிறிஸ்து பிறந்த பொழுது என்றும் கொண்டால், அந்த ஆயிரம் ஆண்டுகள் எல்லையில் ஒரு பெரிய ஊழி நடந்திருக்குமா என்பது ஆராய்தற்குரிய ஒன்று. நிலவரலாற்று ஆராய்ச்சியாளர், கடைசியாக நடந்த பேருழி சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டும் எனக் கணக்கிடுவர். எனவே, தொல்காப்பியர் காலத்துக்கும் கடைச்சங்க காலத்துக்கும் இடையில் அத்துணை பேரூழி நடைபெற்றது எனக் கொள்ள முடியாது. எனினும், மேலே காணும் பல்வேறு சான்றுகளினால் ஒரு சில நிலப்பகுதிகளாவது அந்த ஆயிரமாண்டு எல்லையில் மறைந்திருக்கலாம் என்றும் எண்ண இடமுண்டு அல்லவா?

ஊழி தோன்றியிருப்பினும், அன்றித் தோன்றாதிருப்பினும், அதுபற்றிய ஆரய்ச்சி இங்கு நமக்கு வேண்டா. கடைச்சங்க காலத்துக்கு நெடுநாட்களுக்கு முன்பே