பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்

133


என்று கூறுகின்றார். இவர்களும் சிறந்த அறிவு பெற்ற பண்பாட்டாளர்களே. எனினும், தமிழ்நாட்டுக்குப் பழக்கமில்லாத நால்வகை மக்கட்பிரிவை இவர் கூறுவதனால், ஆரிய மரபு அக்காலத்தில் வந்துவிட்டதென்பது பொருந்தும் என்பர் சிலர். அவர் கூற்றுப்படி இதைக் கொள்ளினும் தவறு இல்லை. எனினும், அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு அந்நாள் அறிவராயினார் என்பது பொருந்தாது.

மற்றும் எழுத்ததிகாரத்தே எழுத்துக்கள் பிறக்கும் இடங்களின் அமைதி கூறும்போது தமிழுக்கும் வட மொழிக்கும் உள்ள மாறுபாட்டை இவர் எடுத்துக் காட்டுகின்றார்.

'அளபிற் கோளல் அந்தணர் மறைத்தே’
‘அஃது இவண் நுவலாது.
(பிறப்பியல். 20, 21)

என இரண்டையும் வேறுபடுத்துவர். இங்கு அந்தணர் என்பது ஆரியரைக் குறிக்குமே என்பர். அவர்தம் எழுத்துக்கள் பிறப்பது போன்று இல்லாது தமிழ் எழுத்துக்கள் வேறு வகையாற் பிறக்கும் என்ற உண்மையை அவருக்கு முன் தமிழ் இலக்கண நூலோர் கூறியபடியே காட்டுகின்றார். இந்த எடுத்துக்காட்டாலும் ஆரியர் அக்காலத்தில் தமிழ் நாட்டில் அடியெடுத்து வைத்துள்ளனர் என்பர் ஒருசாரார். இவர் கூற்றுப் பொய் என்றும், அதற்குச் சாதகமாகச் சில சூத்திரங்களை இடைச்செருகல் என்றும் நாம் தள்ளத் தேவையில்லை. ஆரியர் அக்காலத்தில் தென்னாட்டுக்கு வந்து தமது மொழியையும் வாழ்க்கை முறையையும் பரப்ப முனைந்தனர் என்று கொள்வது பொருந்தும்.

இதுகாறும் கண்டவற்றால் தொல்காப்பியம் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் அப்பெயர் கொண்ட சிறந்த தமிழ் மகனாராலேயே, தமிழ் மரபு கெடாதபடி செய்யப் பட்டதென்பதும், அதே வேளையில் வடநாட்டில் சற்று 500