பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோறளித்த சேரன்

143


களை ஆண்ட பாண்டியரைத் தனித்தனி பொருது வெற்றி கொண்டபின் அல்லவா பெருஞ்சோழனை எதிர்க்கச் சென்றிருப்பான்? இந்த நூற்றாண்டில் ஹிட்லர் சிறுசிறு நாடுகளை வென்ற பிறகுதானே ரஷ்யா மீது திரும்பினான்? இதுதான் அரசியல் தந்திரமும் முறையும். இந்த உண்மை கூட அறியாத இவன் எப்படிப் பெருமன்னனாக முடியும்? மற்றும் இவன் சோழனை வென்றதற்கு அறிஞர் காட்டும் சான்று இப்பாடலில் வரும் அடிகளாகும்.

'நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
(2: 9-11)

என்பன அவை. இவற்றில் சூரியன் அவன் கடலிலே பிறந்து, அவன் கடலிலே மறைகின்றது என்கின்றார். உண்மைதான். இதற்குச் சோழநாட்டுக் கரைக்கு வர வேண்டுவதில்லையே! குமரி முனையில் நாள்தோறும் இக்காட்சியை இன்றும் நாம் காண்கிறோம் குமரி முனை சில காலம் பாண்டியரிடமும் சில காலம் சேரரிடமும் இருந்தது என்பதை வரலாறு காட்டுகின்றது. எனவே, இவன் காலத்தில் குமரிமுனை சேரர் ஆணையின்கீழ் இருந்திருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னரே, நம் கண் முன்னேயே அது சேர நாட்டோடு சேர்ந்து இருந்ததைக் கண்டோமல்லவா? எனவே, இதைக் கொண்டே இவன் சோழனை வென்றான் என்றும், அதனால் பாண்டியர் மாறுபட அவரை வென்ற படைக்குச் சோற்றளித்தான் என்றும் கூறுதல் எவ்வாறு பொருந்தும்? ஒரு கருத்தை முடிவு செய்துவிட்டு அதற்கேற்பப் பிற கருத்துக்களை மாற்றிக் கொண்டு போவது பொருந்துவதன்றே!

இவ்வாறு வேற்றுப் பொருள் கொள்வதற்கு அவர்கள் ஓரிரு காரணங்களைக் கொள்ளலாம். ஒன்று 3,500 ஆண்டுகளுக்கு முன் இம்மன்னனும் புலவரும் இருந்திருக்க முடியாது என்பது. அவர்கள் கடைச்சங்க காலத்தவர்களே