பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோறளித்த சேரன்

147


நெற்றியில் அயல் எழுதிய புலியும் வில்லும்’ என்ற அடிகள் வெறுங் கற்பனைதானா? தமிழ் வேந்தர் இமயம் வரை சென்றதையும், வடவேந்தர் பொதிகை வரை வந்ததையும், இந்திய வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களே! இனி 'வானவரம்பன்’ என்பதற்கு வானத்தை எல்லையாக உடையவன்’ என்று பொருள் கொண்டாலும் தவறு என்ன? இப் பெயர் சேரனுக்கு உரியது. அவன் நாடு வானோங்கிய மலைகளைக் கொண்டது. வான முகட்டைத் தொடுவன என அஞ்சக் கூடியவை அவை. அவற்றின் உயர்ச்சியாலே அவ்வாறு வழங்கலாம். மற்றும் நான் முன்காட்டியபடி குமரிமுனையில் இருந்து நோக்கின், கடல் வானொடு கவிந்து வானமுகட்டைத் தழுவிய காட்சியில் அவனை வானவரம்பன் என வாயாரப் பாடுவதும் தவறு இல்லையே! தரை ஆதிக்கமும் அதைச் சூழ்ந்த கடலாதிக்கமும் அவனிடம் இருந்தனவல்லவா? எனவே, இரண்டும் அச்சேர மன்னனுக்கு ஏற்ற பெயர்களே என்று கொள்ளுவதில் தவறு ஒன்றும் இல்லை. எனவே, ‘வானவரம்பன்’ என்ற பெயர் சேரர்களுக்கு நன்கு பொருந்துவதேயாம். அவர்தம் வானோங்கிய மலை எல்லையும், வற்றாத கடல் எல்லையும் அவர்களுக்கு என்றென்றும் அப்பெயரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் என்பது உறுதி.

இவ்வாறு எண்ணிப் பார்ப்பின், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே—எண்ண எல்லைக்கு அப்பாற்பட்ட நாளிலிருந்தே—இமயம் வரையில் தமிழர்தம் வாழ்வும் வளமும் பண்பாடும் பிறவும் சிறந்து ஓங்கியிருந்தன என்பது நன்கு தெளிவுறும். மற்றும், இங்கே நான் காட்டியவைதாம் முடிந்த முடிபுகள் என்றோ, இவற்றினும் வேறு முடிபுகள் இல்லை என்றோ நான் எல்லை கோலவில்லை. அறிஞர்கள் இத்துறையில் இன்னும் நன்கு ஆராய்ந்து இதுபோன்ற பாடல்களுக்கு மாறுபாடற்ற சிறந்த உரை நலங்களைக் கண்டு உணர்த்துவதோடு, அவற்றால் தமிழர்தம் பண்பாட்டு நெறியும் புகழும் சிறக்க வழி காணவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.