பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நந்தரும் மெளரியரும்

171


இணைக்க முயல்கின்றார். வடுகரை முன்னிறுத்தி (அகம் 281) வந்தவர் மோரியர் எனவும், அவர்கள் மோகூர்ப் பழையனை எதிர்த்த போது கோசர் மோகூர்ப்பழையனுக்குத் துணையாய் இருந்தனர் எனவும், எனவே, மோரியர் கோசரையும் மோகூர்ப்பழையனையும் எதிர்த்தவர் எனவும் குறிக்கின்றார்.[1] எனினும், அகநானூற்று 251-ஆம் பாடல் கோசர் தமிழ் நாட்டு வெளியிலிருந்து சூறைக்காற்றெனத் தமிழ் நாட்டுத் தென்கோடி வரையில் சென்றனர் எனவும், மோகூர்ப் பழையன் பணியவில்லை எனவும், அதற்கெனவே மோரியர் வந்தனர் எனவும் நன்கு காட்டுகின்றது. மற்றும், அகம் 281ல் குறிக்கும் 'வடுகர்’ எனப்படுவார் கோசரேயாவர். அவர்கள், கி. மு. நான்காம் மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் மன்னரோடு மாறுபட்டுப் படையெடுத்து இந்நாட்டுக்கு வந்தவராயினும், சில நூற்றாண்டுகள் கழித்து, மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சி பாடிய காலத்து, அவர்தம் பகைவனாகிய மோகூர்ப்பழையனுடன் நண்பராகவே விளங்கினர் எனக் கொள்ளல் பொருந்தும். இது பற்றிப் பின்னும் காண்போம்

மேலும், ஜயங்கார் அவர்கள் மோரியர் குறைத்த அறைவாய் கள்ளக்குறிச்சி மலையிடை வழியாகும் என்றும், கோசர் பாடி என்னும் ஊர்கள் அப்பக்கத்திலே உள்ளனவென்றும் காட்டுகிறார், எனவே, சந்திரகுப்த மெளரியர் அந்தப் பழங்காலத்தே தமிழ்நாட்டுள் புகுந்து போர் செய்தனர் என்பது நன்கு விளங்குகிறதன்றோ!

இந்தப் போராட்டத்தைப் பற்றி இந்த இரு அகப் பாடல் மட்டுமன்றி வேறு சில பாடல்களும் குறிக்கின்றன. மோரியர் பற்றிய குறிப்புக்கள் புறப் பாடல்களிலும் உள்ளன. அவற்றையும் காண்போம்.


  1. கோசர்-ஒரு சிற்றாராய்ச்சி, ப. 16