பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வரலாற்றுக்கு முன்



குமரி நாட்டிலிருந்து வடக்கு நோக்கி மெள்ள மெள்ளக் குடியேறி இந்தியா முழுதிலும் அதன் எல்லை கடந்தும் ஒரு காலத்தில் வாழ்ந்தவரே திராவிடர் என்றும், மத்திய ஆசியாவில் தோன்றிப் பல்வேறு திக்குகளில் பரவிச் சென்றவரே ஆரியர் என்றும் வரலாற்றறிஞர் பலர் எழுதி வந்தனர்; இன்றும் எழுதுகின்றனர். பரந்த குமரிக்கண்ட நிலப்பரப்பிலேதான் புராணங்களில் காணப்பெறுகின்ற பல வீரர்கள் வாழ்ந்தார்கள் எனக் கூறுவர். இலங்கையும் மகேந்திர மலையும், பிற நாடுகளும் அங்கிருந்தன என்பர். புராண மரபுகளை அப்படியே சரியெனக் கொள்ள முடியவில்லை என்றாலும், அழிந்த குமரி நாட்டில் சிறந்த வீரர் பரம்பரைகள் பல வாழ்ந்திருந்தன எனக் கூறல் தவறாகாது. அந்தப் பரம்பரையினர் மிகு பழங்காலத்தே உலகம் முழுதும் பரவியிருந்தார்கள் என்றும், அவர்கள் பரம்பரையினரே மத்தியதரைக் கடற்பகுதிகளில் குடியேறி யிருந்தார்களென்றும், இங்கும் இமயத்தையும் தாண்டிச் சென்றார்கள் என்றும், பின் பெரு நிலப்பரப்பு அழிய, அவர்கள் முன் கொண்டிருந்த தொடர்பெலாம் அழிய, அங்கங்கே நிலைத்துவிட்டார்கள் என்றும் கூறுவர். இக்கூற்று உண்மையெனக் கொண்டாலும், அந்நிகழ்ச்சி எத்தனையோ, ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒன்றாக இருக்கவேண்டும். அந்தக் கால எல்லை இன்றைய வரலாற்று ஆராய்ச்சி எல்லைக்கு அப்பாற்பட்டதேயாகும். இந்துமகா சமுத்திரம் பரந்த நிலப்பரப்பாய் இருந்ததென்பதையும், இமயம் கடலுள் இருந்த தென்பதையும் தொல் பொருள் ஆராய்ச்சியாளரும், நில ஆராய்ச்சியாளரும், பிற தனித்துறை வல்லுநரும் ஏற்றுக்கொள்ளுகின்றனர். எனினும், அங்கிருந்த மக்கள் இனமே உலகம் முழுவதும் பரவிற்று என்பதைத் தக்க சான்று கொண்டு காட்ட இயலவில்லை. ஆகவே, அது உண்மையென உணர்கின்ற வரையில் மக்களினம் நாட்டில் நுழைந்த வரலாறு பற்றிப் பிறர் கூறுவதை ஓரளவு சரி என்றே கருதி மேலே காண்போம்,