பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வரலாற்றுக்கு முன்


முறைகளும் அவற்றையொட்டிய சமய நெறிகளும் உண்டான காலமும் இதுவேயாகவேண்டும். இக்காலத்திலேதான் அவர் தம் சமயம் வளர்ந்ததோடு, அவர்தம் வைதிக சமயத்துக்கு மாறாக வடவிந்தியாவில் சமண புத்த மதங்களும் தோன்றி ஒன்றற்கொன்று மாறுபட்டுப் போர்களை நடத்தியிருக்க வேண்டும். இப்படிச் சமயம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றில் இரு சாராருக்கும் வடநாட்டில் போராட்டம் நடந்த காலமாக அந்த ஆயிரமாண்டுகளையும் கொள்வது பொருத்தமாகும். முடிவில் வந்தவர்தம் வாழ்வே வெற்றி பெற்றது என்பதையும் வரலாறு காட்டுகின்றது.

அதே காலத்தில் தெற்கே தமிழ் நாட்டில் அமைதி நிலவிற்று என்று கொள்ள முடியும். தொல்காப்பியம் தோன்றிய காலம் அதுவேயாம். அதன் காலத்தைப் பல வரலாற்று அறிஞர்கள் இன்றைக்கு மூவாயிரமாண்டுகளுக்கு முற்பட்டது என்பர். அதாவது, ஆரியர் இந்தியாவுக்கு வந்து ஐந்நூறு ஆண்டுகள் கழித்து என்பதாம். அந்த ஐந்நூறு ஆண்டு இடைக்காலத்தில் ஆரியர் மெள்ள மெள்ள இந்திய நாட்டின் தென்கோடி வரையில் வந்துவிட்டனர் எனக் கொள்வதில் தவறு இல்லை. வருணப் பாகுபாடும், வருணன் போன்ற கடவுளர் வழிபாடும், பிற இரண்டொரு குறிப்புக்களும் தொல்காப்பியத்தில் வருவது கொண்டு அக்காலத்தே ஆரியர் தமிழ் நாட்டில் குடியேறிவிட்டனர் எனக் கொள்வது வரலாற்றுக்குப் பொருத்தமானதேயாகும். ஆயினும், அவர்கள் தங்கள் கொள்கை முதலியவற்றை வடநாட்டைப் போன்று இங்கு நிலைநாட்ட முடியவில்லை என்பதையும் உணரவேண்டும். அன்று மட்டுமன்றி, இன்றளவும் அவ்வேறுபாடு அப்படியேதான் நிற்கின்றது என அறிகின்றோம். எனவே, அந்த இரண்டொரு குறிப்புக்களை இடைச்செருகல் எனக் கொள்ளாது, அவற்றை அப்படியே கொண்டு, அக்காலத்தில் ஆரியர் தமிழ் நாட்டில் கால்வைத்துவிட்டனர் எனக் கொள்வதில் தவறில்லை எனல் பொருந்தும்.