பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடக்கும் தெற்கும்

27



ஆரியர்தம் மொழியியலும், பிற பண்பாடு முதலியனவும் பரந்த இந்தியா முழுவதும் பரவினவாயினும், தமிழ் நாட்டில் மட்டும் அன்று அவை இடம் பெறமுடியாது நின்றுவிட்டன. கடைச்சங்க கால எல்லை வரையில் தமிழ் நாடு ஒன்றிலும் மற்றவருக்கு முடிவணங்கா வகையில் நிமிர்ந்து வாழ்ந்தது. கடைச்சங்க காலத்தில் பல குறிப்புக்கள் வடக்குப் பற்றியும், அதன் வரலாறுகதை பண்பாடு பற்றியும் வருகின்றனவேனும், அவை தமிழ் நாட்டை வென்றதாகக் காண முடியவில்லை. மாறாகத் தமிழர் அவற்றை வென்று கொண்டனர். எனவே காண்கின்றோம். எனவே, இந்நூல் வரலாற்று எல்லையென நாம் கொள்ளும் கடைச்சங்க காலம் வரையில், தமிழ் நாட்டார் பிற நாட்டவர் இடையீடும் தொல்லையும் இல்லாமல் வாழ்ந்தனர் என்பது பொருந்தும்.

இக்கடைச்சங்க காலத்துக்கு முன்னும் இதை ஒட்டியும் பலர் இவ்வடக்கையும் தெற்கையும் பிணைத்துக் காட்டுகின்றனர். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் சந்திரகுப்த மெளரியனை வாழ வைத்த பெருமை கெளடில்லியர் என்ற சாணக்கியருக்கு உண்டு. அவர் தம் அர்த்தசாத்திரத்தில் தெற்கே உள்ள தமிழ் நாட்டைக் குறிக்கின்றார். தாமிர வருணியும், பாண்டி நாடும், ஈழமும் அதில் குறிக்கப்பெறுகின்றன. அக்காலத்தில் வடநாடும் தமிழகமும் வாணிபத்தில் ஒன்றையொன்று பற்றிப் பிணைந்து சிறக்க வாணிபத் தொழிலை நடத்தின என அவர் குறிக்கின்றார். அக்காலத்தில் தமிழ் நாட்டில் உயர்ந்த மணிகளாகிய நவரத்தினங்களும், பிற உயர்ந்த பொருள்களும் இருந்தன எனவும் அவை வடநாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டன எனவும் குறிக்கின்றார். வின்சென்டு ஸ்மித்து அவர்கள் இவற்றையெல்லாம் காட்டி அக்காலத்திலேயே வடநாடும் தென்னாடும் பல வகையில் இணைந்திருந்தன எனக் குறிக்கின்றார்[1]. சங்க இலக்கியத்தில் வரும் மாமூலனார்


  1. Oxford History of India, (ill Edition) p. 92