பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்

33


னைப்பற்றியும் வேத காலத்துக்கு நெடுநாட்களுக்குப் பின்பே அறிய இயல்கின்றது. ஆரியர்கள் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்குச் சற்று முன் பின்னாகச் சிந்துவெளி யிலும் அடுத்துச் சில ஆண்டுகளில் கங்கைச் சமவெளியிலும் குடியேறினார்கள் என்பது வரலாற்று அறிஞர் வரையறுத்த உண்மையாகிவிட்டது. எனவே, அதற்குப் பிறகே இராமாயண பாரதக் கதைகள் உண்டாகியிருக்கவேண்டும். தமிழில் அவை இரண்டும் நெடுங்காலத்திற்குப் பின்பே மொழி பெயர்க்கப்பட்டன. பாரதம் முதன்முதல் பல்லவர் காலத்தில் பெருந்தேவனாரால் வெண்பா யாப்பில் மொழி பெயர்க்கப்பட்டது என்பர். அதனாலேயே அவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார் என வழங்கப் பெற்றாராம். பின்பு பாரதம் வில்லிபுத்துாரர் என்னும் புலவரால் விருத்தப்பாவில் விரிந்த அளவில் மொழி பெயர்க்கப் பெற்றது. முன்னது முழுதும் கிடைத்திலது. இராமாயணம் கம்பராலேயே முதன்முதல் மொழி பெயர்க்கப்பட்டது என்பர். எனினும், இந்த மொழி பெயர்ப்பு நூல்கள் உண்டாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே-கடைச் சங்க காலத்திலேயே-இந்த இரண்டு கதைகளும் தமிழ்நாட்டுக்கு அறிமுகமானவைகளாகவே சிறந்து விளங்கின. சங்க இலக்கியங்களில் இக்கதைகளைப் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மக்கள் வாழ்வொடு பின்னிய காப்பியங்களைச் செய்த அக்காலப் புலவர்கள், அவ்வாழ்வை விளக்கும் எடுத்துக்காட்டுக்களாகவும், விளக்கங்களாகவும் பல இராமாயண பாரதக் கதைக் குறிப்புக்களைக் கையாண்டுள்ளார்கள்; அன்றியும், சில கதைகளை உள்ளபடியே போற்றும் முகத்தான் தங்கள் சொற்களின் இடையிடை பெய்து விளக்கந் தந்துள்ளார்கள். அவற்றுள் ஒரு சில காணலாம்.

தலைவன் களவு மணத்தில் தலைவியைக் கூடி மகிழ்ந்த காலத்து அது அம்பலாய்—அலராய் ஊரிலே பரவ, ஊரில் உள்ள பெண்கள் அதைப் பழிக்கும் முகத்தான் பலப்பல