பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்

53


அவன் மக்கள் தென்கோடி நாடுகளிலும் வந்து சென்றார்கள் என்றும், இத்தென்னாட்டின் ஏற்றத்தைப் பாராட்டிச் சென்றார்கள் என்றும் அறியலாமன்றோ?

மற்றொரு குறிப்பாளரான பெரிப்புளுஸ்[1] இந்தியாவின் பல பாகங்களையும் கண்டு, காட்டி, அவற்றின் அமைப்புக்களையும் பிணைப்புக்களையும் விளக்குகின்றார். அவர் அலெக்ஸாந்தர் படையெடுப்புத் தொடங்கி, கங்கை சிந்து சமவெளி வந்ததைக் குறித்து, மெள்ள மெள்ளத் தெற்கே வந்து சேர, சோழ, பாண்டி நாடுகளையும் அவற்றின் கடற்கரைகளையும் துறைமுகப் பட்டினங்களையும் குறிக்கின்றார். மறைந்த கொற்கை, முசிறி, தொண்டி போன்ற தமிழ் நாட்டுத் துறைமுகங்களும் அவற்றுள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் அந்த யவன ஆசிரியர்தம் குறிப்பால் நன்கு விளங்குகின்றன[2]. மற்றொரு குறிப்பாளர் தமிழ்நாட்டுக் கடற்கரையில் முத்துக் குளித்த சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றார்[3]. இவர்களெல்லாம் தமிழ்நாட்டு வரலாற்றுக் கடைச்சங்க காலத்தும் அதற்குச் சற்று முன்னும் இந்திய நாட்டுக்கு வந்து கண்டவற்றைத் தொகுத்துக் காட்டிச் சென்றவர்களாவார்கள். எனவே, அந்தப் பழைய காலத்தில் வடக்கும் தெற்கும் பல வகையில் இணைந்து நின்றே வாழ்ந்தன என்ற உண்மையை நம் நாட்டு இலக்கியங்கள் மட்டுமன்றி, இந் நாட்டுக்கு வந்த பிற நாட்டார் எழுதிவைத்த குறிப்புக்களும் நன்கு விளக்குகின்றன என்பதறிந்து, இத்துறையில் இன்னும் ஆழ்ந்த கருத்திருத்தின், மேலும் மேலும் புது உண்மைகள் பல புலப்படும் என்பது உறுதி.


  1. Peri Plus (A.D. 75)
  2. Foreign Notices of South India p. 87.
  3. Aelian.