பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இமயமும் குமரியும்

61


இமயம் வரையிலும் ஆப்கானிஸ்தானத்திலிருந்து அசாம் வரையிலும் கைப்பற்றி ஆரியர் நுழைவுக் காலம் வரையில் ஆண்டார்கள் என்றும், பரந்த இந்தியா முழுமையையும் தங்கள் வாழிடமாகக் கொண்டார்கள் என்றும் கொள்ளுதல் வேண்டும்.

தமிழ்நாட்டு மன்னருள் சிலர் அந்தக் கடல் அழியாக் காலத்து இருந்துள்ளார்கள் எனக் கொள்ளலாம் போலும்! அவருள் ஒருவனாகப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் குறிப்பர். அவனைப் பாராட்டிய புலவர் நெட்டிமையார் அவனை வாழ்த்தும்போது,

'எம்கோ வாழிய குடுமி-தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே!
(புறம். 9)

என வாழ்த்துகின்றார். இந்தப் பாட்டின் அடிப்படி அவன் காலத்தில் பஃறுளி இருந்தது எனக் கொள்ளத் தேவை இல்லை. அவனைப் பாராட்டிய புலவர் அவன் முன்னோன் ஒருவன் வாழ்ந்ததை எண்ணுகிறார். அவனுடைய அழியாத பரந்த நாடும், ஆறும், மலையும், பிறவும் அவர் உள்ளத்திரையில் நிழலிடுகின்றன. எனவே, அந்த ஆற்று மணலினும் பல நாள் வாழ்வானாக என அவனை வாழ்த்துகின்றார்: நெடியோன் நன்னீர்ப் பஃறுளி எனவே குறிக்கின்றார். அந்நெடியோன் யாவன்? அவனைப் பற்றிப் புலவர் சிலர் பாராட்டுகின்றனர். அவன் நிலந்தரு திருவின் நெடியோன்’ எனவே பாராட்டப்பெறுகின்றான். அவன் நிலந்தரு திருவிற் பாண்டியனாய் இருக்கலாம் அன்றோ!

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறந்த வீரமும் தமிழ்ப் பற்றும் உடைய மன்னன்; புலவர் வாய்ச் சொல்லுக்கு ஏங்கி நின்றவன். அவன் வஞ்சினம் கூறுங்கால்,