பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

வர்ணாஸ்ரமம்


கேட்டிடுவரோ, என்று பயந்து, நாணி உரையாடுவாள் அந்நங்கை, தன் அங்கையில் கிளி ஏந்தி ! அவள் துயர் துடைக்க, நாணம் நீக்க நான் செல்லவேண்டும். நற்றிறம் படைத்த பாகனே! செலுத்துக தேரினை விரைந்து !! சிவந்த மாலையை யணிந்ததுபோன்ற கழுத்தினையுடைய, அந்தப் பச்சைக் கிளி, பலப்பல பேசவல்லதுதான். எனினும் ஒரே ஒரு சொல் நீ உரைப்பாய், 'இன்று வரல் உரைமோ' என்று மட்டுமே கேட்கிறாள், என் மனத்தைக் கோயில்கொண்டாள்! என் செய்வாள் ஏந்திழை? இல்லத்துள்ளோர் அறிந்திடுவரோ, என்ற அச்சம்: அஞ்சுகத்தினிடம் அதிகம் பேச நேரமில்லை. நினைப்போ என் மாட்டுளது. அந்த நேரிழையாளின் மனை செல்ல, விரைவாகத் தேரை நீ செலுத்து! உனக்குத்தான் திறமை உண்டே! பாகா! செலுத்து ! அந்த மனையின்கண்ணே, அக மகிழ்வுடன் அன்னங்கள் விளையாடுகின்றன; பெடையும் ஆணும், பெருமிதத்தோடு ஆடுகின்றன. தூய்மையான சிறகு, அந்த அன்னங்கட்கு. வெண்மை, அழகான வெண்மைநிறச் சிறகுகள். பெரிய தோள்களையும் மெல்லிய விரல்களையும் உடைய, ஆடை ஒலிப்பவள், நீர்த்துறையிலே, ஆடையிலே தோய்ந்துள்ள கஞ்சிப் பசையினை அலசிவிடுவது கண்டுள்ளாயன்றோ! அதுபோன்ற நிறம், அன்னங்களின் சிறகுக்கு !! அவை ஆணொடு பெண் அளவளாவி, அகமகிழ்கின்றன! காதல் இன்பத்தை அவை நுகரக்கண்டு, என் அன்னம் பச்சைக்கிளியுடன் பேசுகிறாள், பாகனே ! செலுத்துக தேரை விரைவில்! என் நெஞ்சமோ நோகிறது! காதலின் மேம்பாட்டை,