பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

வர்ணாஸ்ரமம்


தன்று. நான், சர் சண்முகம் அவர்களை, இப்பணி புரிய முன்வரவேண்டுமென்றுதான் அழைக்கிறேன். அரசோச்ச அல்ல! அதற்கு ஆயிரம் ஆட்கள், நான் நீ என்று போட்டியிட்டுக்கொண்டு முன் வருவர் என்பது எனக்குத் தெரியும். பாணரையும் பாடினிகளையும் முன் அனுப்பிப் பரிசும் ஈந்து, பட்டம்பெற முயலும் பேர்வழிகள் பலருண்டு. மரம் பழுத்தால் வௌவாலை வாவெனக் கூவி அழைப்பானேன்! "போ" வெனத் துரத்தவே, ஆட்கள் வேண்டும். நான், சர் சண்முகத்துக்கு அனுப்பும் அழைப்பு, அரசோச்ச அல்ல - அரசு அமைக்க!! இரண்டுக்கு மிடையே உள்ள வித்தியாசம் பெரிது. நாவாயில் செல்ல அழைப்பதற்கும், நாவாய் கட்டிச் செலுத்துமாறு கூறுவதற்கும் உள்ள வித்தியாசம் போன்றது. சர் சண்முகத்தின் ஆற்றல், அரசாள்வதின் மூலமாக விளங்குவது எளிது; அனால், அரசு அமைப்பதன் மூலம் அவர் ஆற்றலின் சிகரம் காண்போம்! கரியைக் கொண்டு கரும்பு பறிக்கச் செய்வதா? மலைமரங்களையன்றோ முறித்திடச் செய்ய வேண்டும்! வேங்கையை அழைத்து விளாங்கனியை ஓடித்திடச் செய்வதா! சர் சண்முகத்தின் அறிவாற்றலுக்கேற்ற காரியம், அரசாள்வதல்ல, அரசு அமைப்பது! அவர் ஆண்ட கொச்சியிலே, சின்னாட்கள் மிஸ்டர் டிக்சன் எனும் முன்னாள் சேலம் கலெக்டரன்றோ அரசாண்டார்! கொச்சியோ, வேறு எந்தச் சீமையோ, ஆள்வது, கொங்கு வேங்கையின் வீரதீரத்துக்குச் சரியான வேலை கொடுப்பதாகாது.

மாசிடோனியா (Macedonia) மன்னன் பிலிப், தன் மகனுக்கு, அரணும் அழகும் அமைந்த அரசைத்-