பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

45


மாயா உலகைத் துறக்க எண்ணினார் ஓர் மலையாண்டி. காவி அணிந்தார், காடேகினார். கடும் பசி வந்துற்றபோதன்றி கண்திறவார். கடுந்தவம் செய்துவந்தார். ஓர் மாலை, முல்லை மலர்ந்திருக்கக் கண்டார், நறுமணத்தைப் பெற்றார், நன்றுநன்றென நவின்றார். இரவு இறைவனின் திருவருளை வேண்டினார், உறங்கினார். காலையிலே, முல்லை கண்ட பக்கம் சென்றார், மலரைக் காணோம்! மகேஸ்வரனைச் சில விநாடி மறந்தார், முல்லையைப் பறித்தது யாரோ, என்ற சிந்தனையில் ஈடுபட்டார். அருகே, காலடிக்குறி கண்டார், சற்றுக் கோபங்கொண்டார். மாலைவேளையில் கைப்பிடியாகக் கள்ளனைப் பிடிப்போமென்று கருத்துட்கொண்டார் ; காயமே இது பொய்யடா என்றார் கண் மூடினார் கனிமரத்தடியிலே. மாலையில் சென்றார் முல்லைப் புதருக்கு. முழுமதியன்ன முகவதி, முல்லைச் சிரிப்புடன் நின்றிடக் கண்டார், முல்லையைப் பறித்த படி! "பேசா மலரைப் பறிக்கும் பேசும் மலரே!" என்று அழைத்தார். வணங்கினாள் வனிதை, வந்தவழி சென்றாள்; விழியை அப்பக்கமிருந்து வாங்கிட விரக்தி மார்க்க வித்தகருக்கு நெடுநேரமாயிற்று. மறுதினம் மாலை, மங்கை வருமுன்னம், மலரைப் பறித்தார். வந்ததும் வாஞ்சனையுடன் அவளிடம் தந்தார். தருகையிலே, கரத்தோடு கரம் சேரக் கருத்தோடு கருத்து மோதிக்கொண்டது. மறுதினம், காலைமுதல் காடு முழுதும்சுற்றி வகைவகையான புஷ்பங்களைப் பறித்தார் துறவி ; மாலைநேரத்திலே, முல்லைப் புதருக்கு ஓடோடிவந்தார், முல்லையைக் கொய்தார்; ஏன் இன்னும் அந்த இரஞ்சித சுந்தரி வரவில்லை என்று