பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 & | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் கூச்சலிட்டது. அதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. கையை உயர்த்திக் கொண்டு 'சூசூ என்று கூச்சலிட்டு, அதைத் துரத்துவதற்காக இரண்டு எட்டுகள் எடுத்து வைத்தான். சேவல் மறுபக்கம் குதித்து ஓடி மறைந்துவிட்டது. "சனியன்! ஒரே அடியாகத் தொலைய மாட்டேங்குது” என்று முனகியபடி அந்தப் பக்கம் பார்த்தான். அங்கே வாசல்படியில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு நின்ற செல்லம் அவனை ஏளனமாகப் பார்த்துச் சிரிப்பது அவன் பார்வையில் பட்டது. "அது இப்ப தோட்டத்துக்குள்ளே வரலே வந்தால் அல்லவா தெரியும் !" என்று தனக்குத் தானே பேசிக் கொள்வது போல-ஆனால் அவள் காதுகளில் விழும்படியாக-சொல்லிக் கொண்டான் அவன், செல்லம் வாய் திறக்கவில்லை. அவள் முகத்திலே மட்டும் சிரிப்பு பிரகாசித்தது. மூக்கத் தேவர் மகள் செல்லம் முரட்டுக் குணம் பெற்றவள் தான். பெரிய வாயாடி ஊர்ச் சண்டையை எல்லாம் விலை கொடுத்து வாங்குவாள்' என்று மற்றவர்கள் சொல்வது வழக்கம் எவரையும் மதிக்காமல் எடுத்தெறிந்து பேசுகிற அவளுடைய சுபாவத்துக்காக முருகையா வருத்தப் படுவது உண்டு. எனினும், அவள் வனப்பு அவன் உள்ளத்தை வசீகரித்திருந்தது. செல்லத்துக்குப் பதினாறு அல்லது பதினேழு வயசு தான் இருக்கும். மிடுக்கு நிறைந்த தோற்றம் அவளுடையது. நல்ல வளர்த்தி, கூனிக் குறுகி நடக்கவோ நிற்கவோ தெரியாது அவளுக்கு. கலை எழில் உயிர்த் துடிப்புடன் துளும்புகிற கருங்கல் சிலை மாதிரி காட்சி அளித்தாள் அவள். நிற்கும் வேளைகளிலே, நடக்கும் சமயங்களில், தலையை நிமிர்த்திக் கொண்டு, 'டாக்-டாக் என்று கால்களை வீசி வீசி ஜம்மென முன்னேறுகிற அழகிய