பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கடிதங்கள்

கதை எழுதுவது எனக்குப் பிடிக்கும். அதைவிட அதிகம் பிடிக்கும் கடிதங்கள் எழுதுவது.

கதை எழுதினால், அது அச்சாக பத்திரிகையைத் தேடவேண்டும். அப்படியே கதை அச்சில் வந்தாலும், அதை எத்தனை பேர் படித்து ரசிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.

சில கதைகள் எவராலும் படிக்கப்படாமலே கூடப் போகலாம். ஆனால், கடிதம் விஷயம் அப்படி அல்ல. அதை பெறுகிறவர் அதை படித்தே தீர்வார். அவர் அதில் உள்ள விஷயங்களை ரசித்து மகிழ்கிறாரா, படித்து விட்டு வெறுப்போ கோபமோ அல்லது வேறு ஏதோ ஒரு உணர்ச்சி கொள்கிறாரா என்பது வேறு விஷயம் எழுதி அனுப்பப்படுகிற கடிதத்துக்கு நிச்சயமாக ஒரு வாசகர் உண்டு. எனவே நான் கடிதங்கள் எழுதுவதில் மிகு விருப்பமும் ஈடுபாடும் கொண்டேன்.

நான் அதிகம் பேசுகிறவன் அல்லன். ஆனாலும் கடிதங்களில் நான் அதிகம் பேசினேன். நான் கண்டது, கேட்டது, படித்தது, படிக்க விரும்பியது, எனது கனவுகள், ஆசைகள், பயணங்கள், எனக்குப் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள், என்னைச் சுற்றிலும் நடந்தவை, நடந்ததாகப் பிறர் சொன்னவை - இப்படி சகல விஷயங்கள் பற்றியும் நான் என் கடிதங்களில் பேசுவது உண்டு. ஆகவே, எனது கடிதங்களை வரப் பெற்றவர்கள் அவற்றை மேலும் எதிர்பார்த்தார்கள்.

நான் என் அண்ணாவுக்கு எழுதினேன். அன்புச் சகோதரர் தி.க.சிவசங்கரனுக்கு நிறைய நிறைய எழுதினேன். நான் வெளி உலகத்தில் திரியத் தொடங்கிய 1943-ம் வருடம் முதலே இவர்களுக்கு எழுதினேன். பிறகு நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், என்னோடு தொடர்ப்பு கொண்டு பல்வேறு தகவல்கள் - விளக்கங்கள் பெற விரும்பியவர்கள் என்று எண்ணற்ற பேர்களுக்குக் கடிதங்கள் எழுதினேன்.

என் கடிதங்கள் தங்களுக்கு உற்சாகம் ஊட்டுகின்றன என்றார்கள். சந்தோஷமும் நம்பிக்கையும், ஆறுதலும் தருகின்றன என்றார்கள். இலக்கியம், புத்தகம், பத்திரிகைகள், எழுத்தாளர்கள், மனிதர்கள் பற்றி சுவையான விஷயங்களை தெரிந்து கொள்ள அவை உதவுகின்றன என்றார்கள்.

என் மீது அன்பு கொண்டு தங்கள் புத்தகங்களையும், சிறு பத்திரிகைகளையும் தொடர்ந்து பலரும் அனுப்பலானார்கள்.