பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வல்லிக்கண்ணன் புதுமைகளோடு வளமும் வனப்பும் பெறுவதற்கும் பெரிதும் உதவி யுள்ளன. இது வரலாற்றுஉண்மை.

தமிழ்மறுமலர்ச்சி இந்த நூற்றாண்டின் இருபதுகளில் தொடங்கியது என்று வரலாறு எடுத்துக் கூறுகிறது. ஐம்பதுகளில் அது வலிமை பெற்றது.

முப்பதுகளில் இந்தியவிடுதலைப் போராட்டம் தீவிரம் கொண்டது. அதன் விளைவுகளில் ஒன்றாக இந்திய மொழிகளில் மறுமலர்ச்சி வேகம் தலைகாட்டியது. இந்த விழிப்புஉணர்வு உரைநடை வளர்ச்சிக்கு வகை செய்தது.

அச்சு இயந்திரங்களின் பரவுதலும், உரைநடை வளர்ச்சியும், விடுதலை இயக்க வேகமும் பத்திரிகைகள் வளர்வதற்கு உந்துசக்தி களாக இருந்தன. என்றும் சொல்லவேண்டும்.

கொள்கைப்பிடிப்பும் லட்சியவேகமும், புதுமைகள் செய்யும் துடிப்பும் பெற்ற திறமைசாலிகள், சமூகத்துக்கும் நாட்டுக்கும் கலை களுக்கும் மொழிக்கும் நன்மை செய்ய முயன்றார்கள். ஆர்வத் துடன் உழைத்தார்கள். பத்திரிகைகளைத் தங்களுக்கு ஏற்ற சாதனங் களாகப் பயன்படுத்தினார்கள்.

சொல்லில், பொருளில், சொல்லும் முறையில் புதுமைகள் சேர்ப்பதில் ஆர்வமும், தேசவிடுதலையிலும் சமூக சீர்திருத்தங் களிலும் தீவிரநாட்டமும் கொண்டிருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இந்தியா, சக்கிரவர்த்தினி ஆகிய பத்திரிகைகள் வாயிலாகத் தனது எண்ணங்களை வெளியிட்டார். கவிதைகள், கட்டுரைகள் மூலம் தன் கருத்துக்களையும் சமூக விமர்சனங் களையும் எளியநடையில் எடுத்துச்சொன்னார். வேகமும் உணர்ச்சியும் உயிர்த்துடிப்பும் கொண்ட எளிய இனிய நடைக்கு முன் மாதிரியாக அமைந்தன பாரதியாரின் எழுத்துக்கள்.

தமிழ் இலக்கிய நயங்களையும் வனப்புகளையும் வளங் களையும் ரசனாபூர்வ விமர்சனமுறையில் எடுத்துச் சொல்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் வ.வே.சு. ஐயர். தமிழ் மக்களுக்கு நாட்டுப்பற்றும் வீர உணர்வும் புகட்டுவதிலும் அவர் அதிக ஆர்வம் உடையவராக இருந்தார். அவர் ஆரம்பித்து நடத்திய பாலபாரதி இவ்வகைகளில் பணிபுரிந்தது. தமிழ்மொழி மறுமலர்ச்சி, இலக்கியம் கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும், இலக்கியவிமர்சனத்தின் முன்னேற்றத்துக்கும் இச்சிற்றிதழ் தன்னால் இயன்ற அளவு உழைத்துள்ளது.

தமிழ் நாவலுக்கு முதன்முதலாக இலக்கியத் தகுதி சேர்த்த படைப்பாளி என்ற சிறப்பைப் பெற்றவர் பி.ஆர். ராஜமையர். கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவல் எழுதிப் புகழ்பெற்றுள்ள அவரது பத்திரிகையின் பெயர் விவேகசிந்தாமணி’. அதில் பிரசுர மான தொடர்கதை, கட்டுரைகள் முக்கியத்துவம் உடையன.