பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னன் கட்டுரைகள் 63 ராஜமையரின் சமகாலத்தவரும், பத்மாவதிசரித்திரம் என்ற நாவலின் ஆசிரியருமான பெருங்குளம் அ. மாதவையா சமூக சீர்திருத்த நோக்குடன் எழுதிய இலக்கியவாதி. இந்த நோக்கில் அவர் பல நாவல்களும், குசிகர் குட்டிக் கதைகள் என்ற தலைப்பில் கதைகளும் எழுதினார். தனது எழுத்துக்களை அவர் தன்னுடைய பஞ்சாமிர்தம் என்ற பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

பாரதி வழியில் நாட்டுப்பணி, சமூக சேவை, இலக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தவர் சங்கு சுப்பிரமணியன். 1930களில், காலணாவிலையில், சுதந்திரச்சங்கு என்ற இதழை வெளியிட்டு மக்கள்மத்தியில் பாதிப்பும் ஏற்படுத்தினார் அவர்.

தேச விடுதலைப் போராட்டத்தில் சுதந்திரச் சங்கு தீவிரப் பங்கு ஆற்றியது. விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த கட்டுரைகளும், குத்தும் கிண்டல்மயமான கார்ட்டுன்களும் அதில் வெளிவந்தன. அதன் விளைவாக, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியினரின் அடக்கு முறைக்கு சங்கு இலக்காயிற்று.

பின்னர், 1932ல் தமிழ்த்தொண்டுதான் சங்குக்கு மூச்சு என்று அறிவித்தபடி சுதந்திரச்சங்கு மீண்டும் தோன்றியது. சமூகப் பிரச்சனைகள் பற்றிய கட்டுரைகள், கதைகள், சிந்தனைகள் சங்குவில் இடம்பெற்றிருந்தன. படைப்பு இலக்கியத்தில் சாதனை புரிந்தவர்கள் என்று பிற்காலத்தில் போற்றுதலுக்கு உரியவர்களான வ.ரா. ந. பிச்சமூர்த்தி. கு. ப. ராஜகோபாலன், தி. ஜ. ரங்கநாதன் முதலியோர் சுதந்திரச் சங்கு இலக்கியஇதழில் எழுதினார்கள். புதுமைப்பித்தனின் ஆரம்பகாலக் கதைகள் சிலவும் அதில் பிரசுரம் பெற்றன. புதிய எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் யோசனைகளும் கருத்துரைகளும் சங்கு ஆசிரியரால் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தன.

அரசியல் விழிப்பு ஏற்பட்டு வந்த காலம் அது. மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேசீய விடுதலை உணர்வோடு, மொழி வளர்ச்சி பற்றியும் வலியுறுத்தப்பட்டது. அக்காலக்கட்டத்தில்தான் மணிக் கொடி வாரஏடு பிறந்தது. கே. சீனிவாசன், வ.ரா, டி.எஸ். சொக்கலிங்கம் ஆகியோரின் கூட்டுமுயற்சியில், அரசியல் இதழாக வளர்ந்த அதில் சிந்தனைவேகம் நிறைந்த கட்டுரைகளும், சிறுகதை களும் வெளிவந்தன. வ.ரா.வின் சிந்தனைக் கட்டுரைகளும், நடைச்சித்திரம் என்ற பெயரில் அவர் எழுதிய வாழ்க்கைச் சித்திரங்களும் அதில்தான் வெளிவந்தன. ஒன்றரை வருட காலம் வார இதழாக வந்த மணிக்கொடி நின்று போயிற்று. பின்னர் 1935ல் பி.எஸ். ராமையாவின் பெரும் முயற்சியால் மணிக்கொடி சிறுகதைப்பத்திரிகையாக மலர்ச்சி பெற்றது.