பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 வல்லிக்கண்ணன் கதைகள்

'ஏய் நிறுத்து! இப்படி எல்லாம் என்னைப்பற்றி அகெளரவமாக எண்ணினால் எனக்குக் கெட்ட கோபம் வரும்' என்று பதுமை முறைத்தது.

எண்ணுவது மனசின் இயல்பு அதுக்கு எப்படித் தடைபோட முடியும? 'ஏ ஒன் சைத்தான் குட்டிதான் இது' எனறு என் மனம எண்ணியது. 'இல்லை இல்லை இந்த எண்ணத்தை அழிச்சுப் போட்டேன்' என்றும் அது சேர்த்துக்கொண்டது.

அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற தெம்போடு ஒரு குறும்புச் சிரிப்பை உதிர்த்தபடி தலையை ஆட்டிய பதுமை கதையைத் தொடர்ந்தது.

சந்திரனும் தங்கமான பிள்ளையாண்டான். கண்ணுக்கு லெட்சணமாக இருப்பான். வம்பு தும்புக்குப் போகமாட்டான். அவனும் ஆனந்த வல்லியும் உறவுமுறையாக வேறு இருந்ததனால், ஊரிலே உள்ளவங்களும் உற்றார் உறவினரும் இரண்டு பேரும் சரியான ஜோடிதான், நல்ல பொருத்தம் சீக்கிரம் கல்யாணத்தை முடித்து வைத்துவிட வேண்டியது தான் என்று விளையாட்டாகவும், வினையாகவும் சொல்லுவது வழக்கம். சந்திரனும், ஆனந்தவல்லியும் கல்யாணம் செய்துகொண்டு இன்பமாக வாழ்க்கை நடத்துவதற்கு வேளையும் பொழுதும் வரட்டும் என்று காத்திருந்தார்கள். பெரியவர்கள் அவர்களை அப்படி காக்கும்படி வைத்து காலத்தை ஏலத்தில் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

'விதி, அதிர்ஷ்டம் என்பவற்றை யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி - மனிதருக்குப் புரியாத, அவர்களால் புரிந்துகொள்ள முடியாத, மனித எத்தனத்துக்கும் மேலான சில சக்திகள் மனிதருடைய காரியங்களை பாதிக்கின்றன, மனித வாழ்க்கையை கண்டபடி எல்லாம் ஆட்டிப் படைக்கின்றன என்று ஒவ்வொருவரும் எப்பவாவது எண்ணத்தான் செய்கிறார்கள். அப்படி எண்ணும்படி காலமும், வாழ்க்கையின் போக்கும் எல்லோரையும் தூண்டி விடுகின்றன.

சந்திரன் ஆனந்தவல்லி வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்படுவானேன்? சந்தோஷமாகக் காலம் கழித்து வந்த அவர்கள் சந்தோஷத்தை நீடித்து அனுபவிக்க முடியாமல் போனது ஏன்? இதற்கெல்லாம் 'விதி' என்கிற முடிவைத் தவிர வேறு திருப்திகரமான பதில் எதையும் கண்டுபிடிக்க முடியாது.

சந்திரனுடைய போதாத காலம்தான் அவனை ஒரு மாமரத்தின் மீது ஏறத் தூண்டியிருக்க வேண்டும். உயரத்தில் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு கனி. காதலியின் கன்னத்தின் கதுப்பையும் மினு மினுப்பையும் நினைவு படுத்திய