பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 வல்லிக்கண்ணன் கதைகள்

கதுப்புக் கன்னங்கள், வாய்க்குள் அடைப்பட்டிருந்த பஜ்ஜியினால் மேலும் உப்பிக் காணப்பட்டன. வஞ்சனை இல்லாத வளர்த்தி அந்தப் பெண்ணுக்கு.

"சரியான டொமோட்டோ பிராண்டு. கொழுக்கட்டை மார்க்கு’ என்று கனைத்துக் கொண்டது கைலாசத்தின் மனக் குறளி. 'இப்படி ஓயாமல் திணித்துக் கொண்டேயிருந்தால் ஒரு உருவம் முட்டகோஸ் மாதிரிப் பசுமையாய் வளராமல், என்னைப்போல் வத்தப் புடலங்காயாகவா விளங்க முடியும்?' என்றும் அது இணைத்தது; இளித்தது. கைலாசத்தின் மனக்குறளி எப்பவுமே ஒருமாதிரிதான். கொஞ்சம் 'வால்தனம்’ பெற்றது. அது.

வாயில் கிடந்து திணறிய பஜ்ஜி மறைந்தால் தான் குமரி குரல் கொடுக்க முடியும் என உணர்ந்த கைலாசம் தனது விசேஷ குணமான சங்கோஜத்தை ஒதுக்கி வைக்கத் துணிந்தான். 'ஸார்வாள் இல்லையா?' என்று கேட்டான்.

'அவாள் இவாள் - லார்வாள் ஹிஹி' என்று குதிரை கனைப்பது போல் சிரிப்பைச் சிந்தினான் குமரி... அவள் வாயிலிருந்த பஜ்ஜித் துணுக்குகள் தன் மீது சிதறி விடாமலிருக்க வேண்டுமே என்று அஞ்சி, கைலாசம் சிறிது விலகி நின்றான்.

'ஸார் அவர்கள் இல்லையா என்று கேட்டேன்' அவன் குரலுக்குச் சிறிது கனம் கொடுத்தான். அவன் முகத்தில் சற்றே கடுமை பரவியது.

தட்டிலிருந்த பஜ்ஜிகளைத் தின்று தீர்த்துவிட்ட குமரியின் கண்களில் தனி ஒளி சுடரிட்டது. குறும்புத்தனத்தின் கனலாக இருக்கலாம் அது. மகிழ்வின் சுடராகவும் இருக்கலாம்.

'தின்று முடித்த திருப்தியின் சாயை!' என்று முனங்கியது கைலாச மனக் குறளி.

"பேபி, அங்கே யாரு?" என்ற கேள்வி வந்தது முதலில். பரமசிவத்தின் உருவம் வந்தது பின்னே. ஈரக் கைகளைத் துண்டில் துடைத்தபடி மெதுவாக வந்தார் அவர். அவன் மீது அவர் பார்வை பட்டதும், வெண்பற்கள் பளிச்சிட்டன. அவர் முகத்தில்.

'என்றுமே ஒரு புதிர் இது. ஸார்வாள் பொய்ப்பல் கட்டியிருக்கிறார்களா, இல்லை, அவர்களது நிஜப் பல் வரிசையே இந்த வயசிலும் இவ்வளவு அழகாக இருக்கிறதா என்று புரியவில்லை. உறுதியாக முடிவு கட்ட முடியாத விஷயம் இது' என்று கைலாசம் மனக்குறளி கணக்குப் பண்ணியது. அதுவே இதற்கு முன்பு இபிபடி நூற்றெட்டுத் தடவைகள் முணமுணத்