பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 வல்லிக்கண்ணன் கதைகள்


இவ்விதப் புரவோலங்களை எல்லாம் கேட்டுச் சகித்துக் கொண்டிருப்பதோடு, இடைக்கிடை வியப்புரை உதிர்த்து உற்சாகம் ஊட்ட வேண்டிய அவசியமும் ஏற்படும் என்பதனால் தான் கைலாசம் அடிக்கடி பெரிய மனிதர்களை கண்டு பேசச் செல்வதில்லை. பேராசிரியர் பரமசிவத்தைப் பார்ப்பதற்கு இதற்கு முன் அவன் இரண்டு தடவைகள் தான் வந்திருக்கிறான்.

'அப்போதெல்லாம் இந்தத் தடி பேபி கண்ணில் பட்ட தில்லை, ஸ்கூலுக்கு போயிருந்திருக்கும். அல்லது, பாட்டி வீட்டில் 'டேரா' போட்டிருந்திருக்கும். இதுதான் நான் இவளைப் பார்க்கும் முதல் தடவை' என்று மனக்குறளி தன் தொழிலைச் செய்தது.

இன்று கூடக் கைலாசம் பேராசிரியர் வீடுதேடி வந்திருக்க மாட்டான். 'அன்றொரு நாள் வழியில் சந்தித்த பெரியவர், ‘என்னப்பா உன்னைப் பார்க்கவே முடியலியே? நம்ம விட்டுக்கு வாயேன். உனக்காக ஒரு புஸ்தகம் வச்சிருக்கேன். உயர்ந்த இலக்கியம். அருமையான நூல். நீ அவசியம் படிக்கணும்' என்று கூறி அவன் ஆவலைத் தூண்டிவிட்டார். புத்தகம் என்றால் அவனுக்குப் பெரும் பித்து. நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்து ரசிப்பது தான் அவனுடைய வாழ்க்கை லட்சியம்.

புத்தகத்தை வாங்கிச் செல்ல வந்தவனுக்கு எதிர்பாராத காட்சி விருந்தாக விளங்கினாள் பேபி.

'ஸார்வாள் பலப்பல கட்டுரைகள் எழுதியிருக்கலாம். அபூர்வமாகச் சில கவிதைகளும் இயற்றியிருக்கலாம். இலக்கிய மணிகளை எல்லாம் தேடிக் கண்டு திரட்டித் தந்திருக்கலாம். ஆயினும் அவை எல்லாம் ஸார்வாள் தயாரித்துள்ள இந்த அழகு ரத்தினத்துக்கு ஈடு ஆக முடியாது. உலவுகின்ற நற்காவியம் இவள் ஜீவனுள்ள மணிக் கவிதை' என்ற ரீதியில் 'இலக்கியநயம்’ கண்டு ரசித்துக் கொண்டிருந்தது கைலாசத்தின் மனக்குறளி.

பேபியும் அதற்கேற்றபடி தான் நடந்துகொண்டாள். அடுப்பங்கரைப் பக்கம் போவாள். அங்கிருந்து வெளியே வந்து வேறொரு அறைக்குள் புகுவாள். இன்னொரு அறையினுள் சென்று அவன் பார்வையில் படக்கூடிய இடத்தில் நின்று அதையும் இதையும் எடுத்து, எடுத்ததை இருந்த இடத்திலேயே வைத்து ஏதோ பிரமாத வேலை செய்வது போல் காட்டிக் கொண்டாள். ஒரு அறையின் கதவுக்குப் பின் உடல் மறைத்து, முகிலைக் கிழித்தெழும் முழுமதி போல் முகத்தை மட்டும் காட்டுவாள். மற்றொரு சமயம் முகம் மறைத்து உடல் வனப்புகளை மாத்திரம் காட்சிப் பொருளாக்குவாள்.