பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புன்சிரிப்பு 9

ஒரு தடவை பஸ் வருவதுதான் வழக்கமாக இருக்கு. அதனாலே வீட்டை விட்டு சீக்கிரமே புறப்படணும்' என்று அவர் பரபரப்புக் கொண்டிருந்தார்.

அவருடைய அவசரத்தை அறியாதவர்களாக வீடுதேடி வந்தார்கள் ராசாப்பிள்ளையும் அவர் மனைவியும். ஊரிலே பெரிய மனிதர். ராமலிங்கத்துக்கு நெருங்கிய உறவும் கூட. 'தம்பி, இன்று நம்ப குழந்தைக்கு ஆண்டு நிறைவு. அகிலாண்டம்மனுக்கு விசேஷ பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறோம். நீங்க கட்டாயம் வரணும்' என்று வருந்தி அழைத்தார்.

ராமலிங்கம் தனது பிரயாண ஏற்பாடு பற்றியும், அவசர அவசியம் குறித்தும் எவ்வளவோ சொன்னார். ராசாப்பிள்ளை கேட்பதாக இல்லை.

'எக்ஸ்பிரசுக்குத்தானே போகணும்? ஏயம்மா எவ்வளவு நேரம் கிடக்கு கோயிலுக்கு வந்து, அம்பாளை தரிசித்து பூசையில் கலந்து பிரசாதமும் வாங்கிக் கொண்டு போக தாராளமா நேரம் இருக்கும். அம்மன் அருளும் உங்களுக்குக் கிடைக்கும்’ என்று அவர் சொன்னார். அவர் மனைவியும் வேண்டிக் கொண்டாள்.

அவர்கள் மனசை முறிக்க ராமலிங்கம் விரும்பவில்லை. பூஜையில் கலந்து கொள்ள முடியாது; தேவியின் திருவருள் கிடைக்கிற போது கிடைக்கட்டும் என்று அடித்துப் பேசவும் அவர் மனம் இடம் தரவில்லை.

‘பஸ்ஸை பிடித்து எக்ஸ்பிரசுக்குப் போய்ச் சேரணுமே அதுதான் யோசனையாயிருக்கு’ என்று இழுத்தார் ராமலிங்கம்.

'கவலைப்படாதீங்க. எல்லாத்தையும் அகிலாண்டநாயகி கவனித்துக் கொள்வா' என்று தைரியமூட்டினார் ராசாப்பிள்ளை.

எப்படி தட்டிக் கழிக்கமுடியும்?

'பூஜை சீக்கிரமே நடந்துவிடும்' என்று ராசாப்பிள்ளை உறுதி கூறிய போதிலும், கோயிலில் நேரம் இழுத்துக்கொண்டே போயிற்று. மெதுமெதுவாகத்தான் காரியங்கள் நடைபெற்றன.

அம்பாளுக்குத் திருமுழுக்குச் செய்து, திருக்காப்பிட்டு, அலங்காரம் பண்ணி முடிப்பதற்கே வெகுநேரம் ஆகிவிட்டது. திரை விலகியதும் ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்தில் அம்மனின் திரு உருவம் உயிர்பெற்றுச் சிரித்து நிற்கும் திவ்யமங்கள சொரூபமாகத் திகழ்ந்தது. அத்திருக்காட்சியில் ராமலிங்கம் பக்தி பரவசரானார். தனது பரபரப்பையும்