பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

பலராலும் குறிப்பிடப்பட்ட இரண்டாவது புத்திர பாக்கியமான மகரநெடுங் குழைக்காதன் ஏறுமாறாக ஏதாவது செய்திருந்தால் அவர் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்.

மா.ஆ. பெருமாள் பிள்ளைக்குத் தமிழ் மொழிமீது அபாரமான காதல் என்று சொல்வதற்கில்லை. அவர் தமது புதல்வர்களுக்கு அழகிய - இனிய - நீளப் பெயர்களைச் சூட்டிய காரணம், திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள தெய்வங்களின் திருநாமங்கள் அவை என்பதனால் தான். மூன்றாவது மகன் பிறந்தால், அவனுக்குத் திருப்பாற்கடல் நம்பி எனப் பெயரிட வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தார். அவருடைய மனைவி ஆண்டாள் அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்று ஏமாற்றி விட்டாள். ஆயினும் 'சூடிக் கொடுத்த நாச்சியார்' என்ற நீளப் பெயரிட்டு, பிள்ளை தமது ஏமாற்றத்தை ஒருவாறு மறைத்துக் கொண்டார்.

இவ்விதம் வாழ்க்கையில் குறுக்கிட்ட சிறு சிறு ஏமாற்றங்களையெல்லாம் சகித்துச் சமாளிக்கக் கற்றுக் கொண்ட பிள்ளை அவர்களின் மனமே முறிந்து போகும்படி அல்லவா அவருடைய செல்வ மகன் செயல் புரிந்து விட்டான்!

சீதை என்கிற பெண்ணை அவன் காதலித்தான். '

பிள்ளையாண்டான் செய்த பெரும்பிழை அதுதான். அவன் குழல்வாய் மொழி என்றோ குறுங்குழல் கோதை என்றோ அல்லது அப்படிப்பட்ட நீண்ட பெயர் எதுவோ உள்ள பெண்ணைத் தேடிப் பிடித்துக் காதலித்திருக்கக் கூடாது? போயும் போயும் சீதை என்கிற 'லிம்பிளான ஒரு பெயர் கொண்ட பெண்ணைக் காதலித்தானே! இது போன்ற சின்ன பெயரெல்லாம் நம்ம அண்ணாச்சிக்குப் பிடிக்காதே. அது பையனுக்குத் தெரியலியே! என்று சுப்பையா முதலியார் அடிக்கடி சொல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி விட்டான் அவன்.

சுப்பையா முதலியார் இழவு வீட்டுக் கூட்டத்தில் கூட ஹாஸ்யமாகப் பேசும் பண்பு பெற்றவர். அவர் சுபாவத்துக்கு ஏற்ப, பேச்சிலே சுவை கூட்டிப் பேசினாரே தவிர, அதுதான் உண்மையான காரணம் என்று சொல்ல முடியாது.

மகிழ்வண்ணநாதன் சீதை என்ற பெண்ணைக் காதலித்து, அவளையே கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்தது மா.ஆ. பெருமாள் பிள்ளைக்குப் பிடிக்கவில்லை என்பது உண்மை. ஆனால் பெண்ணின் பெயர் சீதை என்று இருந்தது அதற்குக் காரணமல்ல; அந்தச் சீதை அவருடைய ஏழைத் தங்கை லட்சுமி அம்மாளின் மகளாக இருந்ததுதான் அவரது வெறுப்புக்குக் காரணமாகும்.