பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12○ வல்லிக்கண்ணன் கதைகள்

தெரியாது.டா. ஐயாவாள் உன் கண்ணிலே ஒரு செப்புச் சல்லி கூடக் காட்டமாட்டாக. ஆமா தெரிஞ்சுக்கோ. அந்த நத்தம் புறம்போக்கைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ நடுத் தெருவிலே நிற்க வேண்டியதுதாண்டா, அடேலேய்! ஆமா, ஐயாப்பிள்ளை உன்னைச் சந்தியிலே நிற்க வச்சிரு வாருடா, நிக்க வச்சிருவாரு!’ என்று கூப்பாடு போட்டார்.

ஆனால் மகிழ்வண்ணன் அவருடைய பய முறுத்தல்களுக்கெல்லாம் மசிய வில்லை. அவனுடைய நினைவெல்லாம் சீதையாக இருந்தாள், கனவெல்லாம் அவளாகவே நிழலாடினாள் .

சீதையும் இத்தகைய எண்ணத்தையும் வியப்பையும் அவன் உள்ளத்தில் தூண்டிவிடும் அழகுப் பாவையாக வளர்ந்து வந்தாள். மங்கைப் பருவம் அவள் மேனி முழுவதும் பொங்கி வழிந்தது: கண்ணின் பார்வையில் கவிதை கொட்டியது; இதழ்க் கடையின் குறும்புச் சிரிப்பு அவனையே கொத்தி எடுத்தது. அவள் தன் அத்தை மகள் என்பதில் அவன் பெருமை கொண்டான்; அவள் தன் உரிமை, அவளைத் தன்னுடையவளாக வரித்துக் கொள்ளலாம் என்பதில் மட்டற்ற மகிழ்வே கண்டான். அவன் ஆசை வெள்ளத்துக்கு அணைபோட முயன்றார் தந்தை. அவர் முயற்சி வெற்றி பெறுவதாவது?

அவன் தனது உறுதியை எடுத்துச் சொன்னான். 'வருவது வரட்டும்’ என்றான். 'சின்னஞ் சிறுசுகள் சந்தோஷமாக இருந்தால் போதும்’ எனும் நினைப்புடைய தாய் ஆண்டாள் அம்மாளின் பேச்சு எடுபடவில்லை. சீதையின் அன்னை லட்சுமி அம்மாளோ அழுவதும், புலம்புவதும் மூலையில் இருந்த மூக்கைச் சிந்திப் போடுவதும்தான் தன்னால் ஆகக் கூடிய காரியங்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தாள்.

'வெறும் பேச்சு பையனுக்கு புத்தி புகட்டாது. சொல்லைச் செயல்படுத்தினாலதான் தம்பியாயுள்ளெ அப்பா - சாமி என்று அலறி அடித்துக் கொண்டு வருவாரு, தங்கக் கம்பியாகி இழுத்த இழுப்புக்கெல்லாம் இணங்குவாரு' என்று தீர்மானித்தார் பிள்ளை. வீட்டை விட்டு வெளியே போ என்று ஆணை காட்டியது அவர் விரல்.

மகிழ்வண்ணன் போனான். அவன் அழைப்புக்கு இணங்கி, சீதையும் அவனைப் பின் தொடர்ந்தாள். மாறி ஆடும் பெருமாள் பிள்ளை அவர்களின் வீடு, துக்க வீடாக மாறிக் களை இழந்து காணபபடடது.

அப்பொழுது முன்னிரவு நேரம். நிலவு இலேசாக அழுது வழிந்து கொண்டிருந்தது. குளிர் காற்று சிலுசிலுத்தது.