பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடுத்து வைக்காதவர் 127

கெளரவிப்பதற்காக - அவருடைய நண்பர்கள் அனுதாபக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அநேக பிரசங்கிகள் பங்கு கொள்வதாக இருந்தது. அதற்கென விளம்பரங்கள், முன்னேற்பாடுகள் எல்லாம் ஆர்வத்தோடு செய்யப்பட்டன.

அன்று மாலைதான் இரங்கல் கூட்டம்.

அது பற்றியும், பேச்சாளர்கள் நிகழ்த்தக் கூடிய நமசிவாயப் புகழுரைகள் குறித்தும், அவருடைய வரலாற்றையும் பத்திரிகைகளில் வெளியிடுவதற்குச் சிலர் தீவிர முயற்சிகள் செய்தார்கள், !

ஆனால், பாருங்கள் -

மனிதர்கள் தீவிரமாகத் திட்டம் தீட்டுகிறார்கள்; காலம் குறும்புத்தனமாக அல்லது குரூரமாக, அதைச் சிதைத்து விடுகிறது!

நமசிவாயம் விஷயமும் அப்படித்தான் ஆயிற்று!

அன்று அதிகாலையில், யாருமே எதிர்பார்த்திராத விதத்தில், பெரும் சோகம் நாடெங்கும் கவிழ்ந்து கொண்டது. பெரும் தலைவர் ஒருவர் திடீரென்று மரணமடைந்தார். அதனால் எல்லா நிகழ்ச்சிகளும் நின்று போயின. அத்துக்கத்தைக் கொண்டாடும் முறையில், முன்னறிவிப்பில்லாமலே, பல துறைகளிலும் சகலவிதமான கொண்டாட்ட ஏற்பாடுகளும் ரத்து செய்யப்பட்டன. திரு. நமசிவாயம் அவர்களின் நினைவுக்காகத் திட்ட மிடப் பெற்றிருந்த நிகழ்ச்சி மட்டும் விதி விலக்கு ஆகிவிட இயலுமா என்ன?

'பாவம், நமசிவாயம்! அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை!' என்றுதான் இரக்கப்பட முடிந்தது அவருடைய நண்பர்களால்!

(அமுத சுரபி, 1966)


வெயிலும் மழையும்


சொக்கம்மாளுக்கு எத்தனையோ ரகசியங்களை இனிக்க இனிக்கச் சொல்லும் ஒரே தோழி அவளுடைய கண்ணாடிதான்.

விலை குறைந்த சாதாரணக் கண்ணாடிதான் அது. இருக்கட்டுமே! சொக்கம்மா மட்டும் பட்டும் படாடோப ஆடைகளும் கட்டி மினுக்கும் சீமாட்டியா என்ன? வேலைக்காரி சீதையம்மாளின் மகள் தானே. -