பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 வல்லிக்கண்ணன் கதைகள்

புறமுமாக நின்றுகொண்டு, நீண்ட தலைப் பின்னல் துவள, சிவப்புக் கரையிட்ட கறுப்புப் பாவாடை அலைகளிட, வான்நீல நிறத் தாவணி அழகு செய்ய அப்படியும் இப்படியும் அசைந்தாடிக் கொண்டிருந்த குமரி ஒருத்தி தான் இவ்வாறு ஒலி பரப்பினாள். -

உண்மைதான், அவளைச் சந்திரன் அடிக்கடி - அந்த வீதி வழியே போகும்போதும் வரும்போதும், அவ்வீட்டின் முன்னே ஏதாவதொரு போஸில் கண்டு களித்திருக்கிறான். அவள் திடீரென்று இப்படிக் குரல் கொடுக்கத் துணிவாள் என்று அவன் எதிர்பார்த்ததில்லை. -

அவள் பேசியது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது என்றால், அதனினும் வியப்பாக எழுந்தது மற்றொரு ஒலிபரப்பு.

'அவர் உன்னை "லவ்' பண்ணுகிறாரோ என்னவோ!'

தனது குரல் எட்ட முடியாத துரத்தில் தான் அவன் வருவான் என்ற தெம்பிலே ஒருத்தி பேசியதாகத் தோன்றியது.

"ஐயோ, ஐயோ!' என்று கூவி, சின்னவள் - வாசல் நடையில் நின்றவள் - சிரிப்பு வெட்கம், அச்சம் எல்லாம் முகத்திலே படர, ஒரு கையால் தன் வாயைப் பொத்திய பாவம் ரசமான காட்சியாகப்பட்டது சந்திரனுக்கு. அதை ரசிக்காமலிருப்பானா அவன்?

அவள் கண்கள் அவன் பக்கம் மோதி, வீட்டின் உள்ளே, வராந்தாவிலிருந்த மாடிப் படிக்கட்டின் பக்கம் புரண்டன. அவள் பார்வை நயம் நிறைந்ததாக இருந்தது.

இதற்குள் அவன் அவ்வீட்டருகே வந்து விட்டான். மாடிப்படியில் ஜம்மென வீற்றுத் தங்கையின் பேச்சுக்குக் கேலியாகப் பதில் சொன்ன பெரியவள் அவன் பார்வையில் நன்றாக விழுந்தாள். அதே சமயம், 'இவளை லவ் பண்ணுகிறவனின் மூஞ்சியை நாமும் பார்த்து வைக்கலாமே' எனும் ஆசையால் தூண்டப்பட்டவள்போல, கதவருகே வந்து, தங்கையின் பக்கம் நின்று எட்டிப் பார்த்தாள் இன்னொருத்தி - சின்னவளின் இரண்டாவது அக்கா. -

அந்நேரத்தில் அம்மூன்று பேரின் முகங்கள் காட்டிய சித்திரமும் கண்களின் போக்கும் விந்தைக் காட்சிகளாகத்தான் அமைந்தன. .

மாடிப்படியில் கொலுவிருந்த பெரிய அக்காள், தங்கையால் குறிப்பிடப்பட்டவன் இவனா என்று அறிந்ததும் குழப்பமுற்றாள். கேலி செய்யும் குஷியில் மலர்ந்திருந்த அவளது