பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்கொன்றை பூக்கும்போது... 175

மிகுந்த - துள்ளலும் குறுகுறுப்பும் நிறைந்த - கவிதை போன்ற அச்சிறுமியைக் 'கெட்ட கழிசடை' என்று குறிப்பிடுவதற்கு என் மனசுக்கே இஷடமில்லை.

அவள் போவதற்கு முன்பு என்னிடம் சொல்லிக் கொண்டாள். "இனி எப்போ பார்க்க முடியுமோ?" என்றேன்.

"ஒரு வருஷம் கழிச்சுத்தான்" என்று ராஜம் சொன்னபோது, அவள் அக்கா என்னவோ முணுமுணுத்தாள்.

"ஆமாம். அடுத்த வருஷம் பொன்கொன்றை பூத்துக் குலுங்குமே, அப்போதான். ஒவ்வொரு வருஷமும் இந்த மரம் பூத்து ஜில் என்று இருக்கிற சமயத்திலேதான் நாங்க வருவோம். அது ஒய்ந்து போகிறபோது, நாங்கள் போய்விடுவோம்” என்று தங்கச்சி உரக்கப் பேசினாள். அக்காள் அதற்கு 'அடி எடுத்து'க் கொடுத்தாள் போலும்!

மறு வருஷம், கொன்றை சொரிந்து சிரித்த போதும் அவர்கள் வந்தார்கள். அதற்கு அடுத்த வருஷமும் வந்தார்கள்.

இரண்டாவது வருஷம் ராஜம் பழைய சிறு பெண்ணாகத்தான் இருந்தாள். துடுக்குத்தனமாகப் பேசினாள்.

"நீங்க ஏன் கல்யாணம் செய்துகொள்ளாமலே இருக்கீங்க?" என்று திடீரென்று கேட்டாள் ஒருநாள்.

"அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படனும்?” என்றேன்.

"எங்க அக்கா கவலைப்படுகிற மாதிரித் தெரிஞ்சுது, அதுதான்!” என்று சிரிப்புடன் சொன்னாள் அவள்.

"அவள் தான் ஏன் கவலைப்படனும்?”

"அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலே யில்லா! அதனாலேதான்!” என்று கூறி, குறும்புச் சிரிப்பு சிந்தினாள்.

அவள் தாத்தா சிலசமயங்களில் என்னிடம் பேசியது உண்டு. சும்மா பொதுவாக அதையும் இதையும் பற்றி ஏதாவது சொல்லுவார். அந்த வருஷம் அவர் எனக்குச் சில போதனைகள் புரிய முன்வந்தார்.

"நீங்கள் சும்மா புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பது வீண்வேலை. புத்தகங்களைவிட வாழ்க்கையும், மனிதர்களும் சுவாரஸ்யமான விஷயங்கள்" என்று ஒருநாள் அவர் சொன்னார்.

"சரிதான்" என்றேன்.

"வாழ்க்கையிலிருந்து தப்பி ஓடுகிற - ஓட விரும்புகிற - போக்குத்தான் வெறுமனே புத்தகங்களைப் படித்துக்கொண்