பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180 வல்லிக்கண்ணன் கதைகள்

இனிமைகளைக் கண்டு ஆனந்திக்க சதா ஊர் விட்டு ஊர் போய்கொண்டே இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மனைவி ஒரு விலங்கு ஆகவும், வளரக்கூடிய குடும்பம் ஒரு தடையாகவும் இருக்கும்’ என்று கருதித் தனிமை வாழ்வைத் தேர்ந்து கொண்ட அவருக்கு அந்த வாழ்வே சுமையாய், பயனற்றதாய், பசுமை இல்லாததாய் தோன்றலாயிற்று.

இப்பொழுதும் அவர் புத்தகங்கள் படிக்கத்தான் செய்தார். புதிய புதிய புத்தகங்கள் எத்தனையோ. முன்பு பல முறை படித்த நூல்களை மீண்டும் படித்தார். புதுப்பது இடங்களுக்குப் போனார். பத்து இருபது வருஷங்களுக்கு முன்பும் - அதற்கு முந்தித் தனது சின்னஞ் சிறு பிராயத்திலும் - அறிமுகம் செய்து கொண்டிருந்த இடங்களுக்கும் போனார். அங்கு அவர் காண நேர்ந்த மாறுதல்கள், வளர்ச்சி அல்லது சிதைவுகள், பலவும் அவருக்கு விதம் விதமான உளக் கிளர்ச்சி ஏற்படுத்தின.

அதே போல, அவருக்கு அறிமுகமாகியிருந்த மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த மாறுதல்களும் அவர் உள்ளத்தில் சலனம் உண்டாக்கின. 'வாழ்க்கை நதி வேகமாகத்தான் ஒடுகிறது' என்று எண்ணுகிறபோதே, தான் அன்று போல் இன்றும் - குறிப்பிடத் தகுந்த மாறுதல் எதுவும் அற்று, கால வெள்ளத்தாலும் அசைக்க முடியாத கரும்பாறை போல் நிற்பதாக ஒரு நினைப்பும் அவருள் சுழியிடும். பந்த பாசங்களற்று, பிடிப்பற்று, பற்றுதல் எதுவுமற்று, தன்னைப் பற்றிக் கொண்டு வாழ்வுச் சுழல்களில் ஈடுபடுத்த எவருமற்று, ஒற்றைத் தனிநபராய் நாளோட்டும் தன்னுடைய நிலைமையும் புன்னைவனத்தின் மனசை உறுத்தும்.

'இப்படி வாழ்வதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது' என்று பெருமையோடு கருதிவந்த அவர் உள்ளத்திலே, நாளடைவில் 'இப்படி வாழ்வதும் ஒரு வாழ்க்கைதானா?' என்றொரு சஞ்சல நினைவு அலை மோதுவதை அவராலேயே தடுக்க முடியவில்லை.

கடற்கரைக் கோயில் அருகே அமர்ந்திருந்த புன்னை வனத்தின் கண்கள், விரிந்து கிடந்த நீர்ப்பாலை மீது படர்ந்து விழுந்த சூரியஒளி செய்து கொண்டிருந்த மினு மினுப்பு வேலை நயங்களை வியந்தன. வெள்ளித் தகடுகள் போலவும், அசைந்து அசைந்து நெளியும் வெள்ளிய பறவைகள் போலும், நீர்ப்பரப்பு சிற்றலைகளைச் சித்தரித்துக் கொண்டிருந்தது. அதன் அசைவுகளினால் சிதறும் ஒளிக்கற்றைகள் இனிய காட்சிகளாகி அவர்