பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188 வல்லிக்கண்ணன் கதைகள்

இழுத்திட்டுப் போயி, ரயில்வே ஸ்டேஷனிலே கிடக்கிற ஒரு பார்சலை எடுத்துக்கிட்டு வா’ என ஏவுவார் இன்னொரு கடைமுதாளி.

ஒவ்வொரு கடைக்காரருக்கும் எடுபிடி வேலை செய்து வெளியே அலைவதற்கு ரங்கன் தேவைப்பட்டான். அவ்வப்போது 'காப்பிக்கு, இட்டிலி பலகாரத்துக்கு' என்று சில்லறை ஏதாவது கொடுப்பார்கள்,

நிறையச் சாமான்கள் வாங்க வருகிறவர்கள் பெட்டி அல்லது கூடையை சுமந்துவருவதற்கு அவன் துணையை நாடுவார்கள், ‘என்னடா வேனும்?' என்று கேட்பார்கள், அவன் புடதியைச் சொறிவான். மலைத்தொடரின் உச்சிப் பகுதிபோல் தெத்துக் குத்தலாகத் தென்படுகிற பல்வரிசையைக் காட்டுவான். 'பாத்துக் குடுங்க முதலாளி' என்பான். கறாராகக் கூலி பேசத் தெரியாது அவனுக்கு.

'சரிசரி... துக்கிக்கிட்டு வா' என்று மிடுக்காகச் சொல்லி, பெருமிதமாக முன்னேநடப்பார் சாமான் வாங்கியவர்.

உரிய இடம் சேர்ந்து, சுமையை இறக்கியதும் ரங்கனுக்கு நாலனாவோ, எட்டனாவோ பார்த்துக் கொடுப்பார் அவனால் 'முதலாளி' என அழைக்கப்பட்டவர்.

அவன் முழங்கையை சொறிவான். நகராமல் நிற்பான்,

‘என்னடா? ஏன் நிக்கிறே? என்று எரிந்து விழுவார் மற்றவர்.

என்ன முதலாளி, வயித்திலே அடிக்கீங்க? எவ்வளவு பளு! எத்தனை தூரம் சுமந்து வந்தேன்? கூலியை குறைச்சுத் தாறீங்களே? பார்த்துக் குடுங்க முதலாளி' என்று கெஞ்சலாகக் குறைகூறுவான் ரங்கன்.

'சீ போடா சவமே! நான் தந்திருப்பதே அதிகம். உனக்கெல்லாம் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியே ஏற்படாது... போ போ... இன்னொரு சமயம் பார்த்துக்கிடலாம்' என்று விரட்டுவார் அவர்.

இப்படித் தான் ஒவ்வொரு இடத்திலும் நடக்கும். சிலர் 'அயோக்கியா! பேராசை பிடித்த நாயே!' என்றெல்லாம் சொல்லெறிவார்கள், ரங்கனின் போக்கினால் சூடு ஏறப்பெற்று.

ரங்கன் அப்பாவி. அடிபடாதபோதும் வலிய நாயைக்கண்டு தன் வாலைப் பின்கால்களுக்கிடையில் ஒடுக்கிக்கொண்டு நெளிந்து குழைந்து அஞ்சி மிரண்டு பார்த்துக்கொண்டே மெது