பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200 வல்லிக்கண்ணன் கதைகள்

போய், அவளது செயலின் அழியாத நினைவாய் அந்த ஓடை ஒரு பெயரை தாங்கிக்கொண்டு நெளிகிறது இன்றும்.

அதைப் போன்றது தான் ரஞ்சிதத்தின் கதையும்.

ரஞ்சிதமும் ராணியும் சுற்று வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற ஆட்டக்காரிகளாக இருந்தார்கள். அது ஒரு காலம். கரகம் ஆடுவது, சும்மா குதித்துச் சுற்றிச் சுழன்றாடுவது என்று ஒரு தொழிலை மேற்கொண்டிருந்தார்கள். கோயில்களில் கொடை, திருவிழா என வந்தால், இவர்களுக்கு விசேஷமான கவனிப்பும் வருமானமும் கிட்டும்.

சுப்பய்யா என்று ஒருவன். அவன்தான் அவர்களுக்குப் பாதுகாப்பாளன். நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறவன். விழா விசேஷங்களுக்க அவர்களை இட்டுச் சென்று. நிகழ்ச்சிகளை பொறுப்பாக நடத்திவைத்து, பணம் பெற்று, அவர்களுக்கு ஒரு தொகை கொடுத்துவிட்டு, மீதியை தன்பங்காக வைத்துக் கொள்கிறவன். கான்ட்ராக்டர், மானேஜர், இயக்குனர் என்று சமயத்துக்குத் தக்கபடி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வான்.

ரஞ்சிதம் ஒரு ஊரிலும், ராணி பக்கத்து கிராமத்திலும் வசித்தார்கள். ரஞ்சிதம் நல்ல சிவப்பு. ராணி கறுப்பு. ஆகவே, அவர்களைப்பற்றிப் பேசியவர்கள் 'சிவத்தப்புள்ளை' 'அந்தக் கறுத்தப்புள்ளை' என்று குறிப்பிடுவது இயல்பாக இருந்தது. ராணி - ராணி என்ற அடிக்கடி சொல்லும் சுப்பய்யாவுக்குக்கூட, ரஞ்சிதம் என்று கூறுவது சிரமமாக இருந்ததோ, அல்லது சிவத்தப் புள்ளை என்று குறிப்பிடுவது மனசுக்குப் பிடித்திருந்ததோ, தெரியவில்லை - சிவத்தப் புள்ளை என்று சொல்லு திர்ப்பதில் ஒரு சந்தோஷம் கிடைத்ததாகவே தோன்றியது.

"ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருக்கு. ராணியை பார்த்துப் பேசிவிட்டு, இப்ப சிவத்தப் புள்ளை ஊருக்குப் போறேன் அவளிடம் தகவல் சொல்ல'. சுப்பய்யா இவ்வாறு கூறுவது வழக்கம். அவ்வூர் சிவத்தப்பிள்ளையூர் என்று பெயர் பெறுவதற்கு பிள்ளையார் சுழி போட்டவன் சுப்பய்யா தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

பிறகு, ரஞ்சிதத்தின் ஆட்டத்தைப் பார்த்து மயங்கியவர்கள், அவளைப் பார்த்துக் கிறங்கியவர்கள், அவளுடைய பெயரைக் கேட்டுச் சொக்கியவர்கள் எல்லோரும் அந்த சிவத்தப் புள்ளை' என்றும், 'சிவத்தப்புள்ளையூர்' என்றும் பேசுவதில் மகிழ்ச்சி அடைந்தார்கள்.