பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மனம் தேற மருந்து


கைலாசம் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.

அவனைப் பார்த்துப் போவதற்காகப் பலபேர் வந்தார்கள்.

அவன் இளம் கவிஞன். கலைஞன். இலக்கிய ரசிகன். சதா புத்தகங்களைப் படித்து, ரசித்து, அவற்றின் நயங்களில் ஆழ்ந்து கிடப்பவன். இப்படி அவனைப் பலரும் அறிந்து வைத்திருந்தார்கள்.

ஆகவே, அவன் நண்பர்கள், தெரிந்தவர்கள், அவனைப் பற்றிக் கேட்டிருந்தவர்கள் என்று பல ரகத்தினரும் வந்தார்கள், அவன் என்னென்ன மருந்துகள் சாப்பிடுகிறான், எந்த வைத்தியரிடம் சிகிச்சை பெறுகிறான் என்பன போன்ற விஷயங்கள் குறித்தும் அனுதாபத்தோடு கேள்விகள் கேட்டார்கள். ஆதரவாகச் சில சில வார்த்தைகள் சொன்னார்கள், போனார்கள்.

உரிமை பெற்ற சிலர் நீ அதிகம் படிக்கக் கூடாது. கொஞ்ச காலத்துக்கு எழுத்தை மறந்துவிடு. உடம்பைக் கவனித்துக் கொள். ஒய்வு நிரம்பத்தேவை. சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத முடியும்? 'உடம்பார் அழியின் உயிரார் அழிவார்' என்று திருமூலர் சொல்லவில்லையா? கடன் வாங்கியாவது உடலைத்தேற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் அப்பனே!" என்ற தன்மையில் அன்புரை உபதேசித்தார்கள். சிலர் பழங்கள் வாங்கி வந்தார்கள். ஒருவர் ஆர்லிக்ஸ் வாங்கி வந்து அன்பளிப்பாக உதவினார். ஒரு நண்பர் தேன்புட்டி கொண்டு தந்தார். 'தேன் உடம்புக்கு நல்லது. தினசரி தேன் சாப்பிடு. அப்புறம் பார். எலுமிச்சை ரசத்தைத் தேனுடன் கலந்து சாப்பிட்டால் ரொம்ப ரொம்ப நல்லது' என்று இலவச சிகிச்சை உபதேசமும் அருளினார்.

போதனைகளும் நல்லுரைகளும் கைலாசத்துக்கு அலுப்பையோ, மனக் கசப்பையோ தரவில்லை. மாறாக, ஒருவிதப் பெருமை உணர்வையே அவை அவனுள் வளர்த்தன.

பெரும்பாலரது கவனிப்பையும் பெற வேண்டும் என்ற ஏக்கம் அவன் உள்ளத்தில் உறைந்து கிடந்தது. இப்போது அனைவரும் தேடி வந்து, அன்புடன் விசாரித்து, நல்ல வார்த்தைகள் சொல்வதற்கு, நோய் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது. 'ஆகவே நோயும், வேண்டுவதே மானிடர்க்கு!’ என்றுகூட அவன் மனம் பாடிக் களித்தது.