பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனம் தேற மருந்து 2O7

'உனக்கு விஷயம் தெரியுமா? மேல ரத வீதியிலே புது ஒட்டல் ஒண்ணு வந்திருக்கு. அங்கே பாசந்தி பிரமாதம். அடையும் அவியலும் அபாரம். இந்த இரண்டையும் ருசிக்கறதுக்குன்னே ரொம்பப் பேரு அங்கே வாறாங்க. காபியும் ஃபஸ்ட் க்ளாஸா கொடுக்கிறான். நீ அங்கே போயி அவசியம் இதுகளை டேஸ்ட் பண்ணனும். அப்புறம் அநத பாசந்தி, அடை அவியல், காபிக்கு ஒரு கவிதையே பாடிப் போடுவே!"

இதைச் சொல்லி விட்டு அட்டகாசமாகச் சிரித்தார் விநாயகம் பிள்ளை. கைலாசம் அவர் முகத்தையே பார்த்தபடி கிடந்தான்.

'எழுந்திருச்சி உட்காரப்பா. என்ன சும்மா படுத்துக்கிட்டு! வேணுமின்னா ரெண்டு தலானியை அண்டை கொடுத்துக்கோ. அல்லது ஈசிசேரிலே சாய்ந்து இரேன்... உம். உன்னாலே வர முடியாது போலிருக்கு, நாங்க அஞ்சாறு பேரு அருவிக்குப் போக பிளான் பண்ணியிருக்கோம். போன வருசம் நீ வந்தியா? ஞாபகம் இல்லே. போன மாசம்கூட நான் போயிருந்தேன். அடா அடா, அருவியிலே குளிக்கிற சுகம் இருக்குதே...”

அந்த வேளையிலேயே அவர், கொட்டுகிற அருவியில் குளித்துக் கொண்டிருப்பது போல் சொக்கிய ஒரு சுகானுப வத்தை முகத்தில் தேக்கினார். 'த்சொத்சொ!' என்றார்.

'தினசரி அருவியிலே குளிக்கணும். ஒற்றையடிப் பாதை வழியே மலைப்பகுதிகள், காடுகள் ஊடே எல்லாம் சுற்றித் திரியணும். அருமையா பொழுது போகும். கவலை என்கிறதே தலை காட்டாது. சீக்கு கீக்கு எதுவும் கிட்டத்திலே அண்டாது. நான் அப்படி வாழ்க்கையை கழிக்கலாம்னு எண்ணியிருக்கிறேன். நீயும் வாறதா இருந்தால் வரலாம்... வசந்த காலம் வந்திட்டுது. எங்கும் ஜம்னு புது அழகும் புது மணமும் புதுப்புது வர்ணங்களும் நிறைஞ்சு கிடக்கு.

'கல்யாண முருங்கை பளிர்னு பூத்துக் குலுங்குது, நீயும் கவனிச்சதுதானே? முதன் முதல்லே வசந்தத்தின் வருகைக்கு கட்டியம் கூறுவதுபோல இந்த முருங்க மரங்கள்தான் பூத்துக் குலுங்குது. செக்கச் செவேல்னு. நீ கூடச் சொன்னியே - வேட்டையாடி ஒரு பிராணியைக் கொன்ற புலியின் ரத்தம் தோய்ந்த நகங்கள் மாதிரி செக்கச் சிவந்த பூக்களை பூத்து நிற்கிற மரங்கள்னு ஒரு பாடலில் இருக்குதுன்னு. அது எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும். நீயும் அந்தப் பூங்கொத்துகளை பார்க்க ஆசைப்படுவேன்னு நினைக்கிறேன்.'