பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 வல்லிக்கண்ணன் கதைகள்

பழகுவதில்லை; ஊர்ப் பொது விவகாரங்களில் அக்கறை கொள்வதில்லை; கோயில் திருவிழாக்கள், விசேஷ பூஜைகள் போன்ற சந்தர்ப்பங்களில் ஊராரோடு சேர்ந்து கோவிலுக்குப் போவதில்லை; இப்படி எவ்வளவோ சம்பிரதாயங்கள் இல்லையா - அவற்றில் எதையுமே அவர் அனுஷ்டிப்பதில்லை.

ஆனால் ஊர் இழவு, ஊர் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவசியம் - 'தலையைக்காட்ட வேண்டும்’ என்று சமூகநியதி வரையறை செய்துள்ள பொதுக்காரியங்களுக்கு வேண்டா வெறுப்பாக அவரும் போகத்தான் வேண்டியிருந்தது. அப்போது கூட 'பேருக்குத் தலையைக் காட்டி விட்டு வருகிற' வேலைதான். 'இன்னொருத்தன் வீட்டிலே கையை நனைக்கிற சோலியே கிடையாது'. அதாவது, விருந்துச் சாப்பாட்டில் பங்கு பற்றுவது இல்லை, ரொம்ப நேரம் இருந்து கலகலப்பாக பேசி, உற்சாகமாக சிலரை பரிகசித்தும் சிலரால் கேலி செய்யப்பட்டும் பொழுது போக்குவது என்பதெல்லாம் அவருடைய வாழ்க்கை நியதிக்கு அப்பால்பட்ட விஷயங்கள்.

ஊர் இழவு என்றால், சாவு வீட்டுக்குப் போவது, நீர்மாலையில் கூட்டத்தோடு கூட்டமாக வாய்க்கால் வரை போய் வருவது, பினத்தைத் தூக்குகிற வரையில் இழவு வீட்டில் காத்திருந்து அப்புறம் பாடையோடு சுடுகாடு வரை போய் ஆக வேண்டியதை எல்லாம் முடித்து கடைசியில் ஆற்றில் குளித்துவிட்டுத் திரும்புவது என்பது தலைமுறை தத்துவமாகக் கையாளப்படுகிற வழக்கமாகும்.

வரவர சில சுகவாசிகள் இதையெல்லாம் ஒழுங்காகச் செய்வதில்லை. சும்மா தலையை காட்டிவிட்டுத் திரும்பி விடுவார்கள். மூக்கபிள்ளையின் வழக்கமும் அதுதான்.

ஆனால் 'ஊர் வழக்கம்’ ஒன்றை அவர் தட்ட முடியாமல் போயிருந்தது. .

ஒரு வீட்டில் கல்யாணம் நடந்தால் பல தினங்களுக்கு பிறகு 'நல்ல மாசத்துப் பழம்' என்று வாழைப் பழங்களும் சிறிது சீனியும் ஊர் பூராவுக்கும் வழங்குவார்கள். "மறு வீடு வீட்டு பலகாரம்" என்று மைசூர் பாகு லட்டு மற்றும் சில இனிப்பு தினுசுகள், முறுக்கு, மிக்ஸ்சர் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வைத்து சொந்தக்காரங்களுக்கு (சொக்காரங்களுக்கு) வழங்குவர். இது 'ஊர் வழக்கம்’ ஆகும். -

பெரியவர் யாராவது இறந்து போனால், மகள் அல்லது பேத்தி ஊருக்கு 'கடலை போடுவது வழக்கம்'. அரைப்படி