பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்னவன் 219

சொல்லணும். கள்ள மூதி பாலை இறக்காம எக்கிக்கிடும். அப்புறமா கண்ணுக் குட்டிக்கு கொடுக்கும்’ என்றான் முருகன.

பெரியவர் அவனுடைய அண்ணாச்சி. அவரைப் பற்றி அவன் குறைகூறலாம். ஆனால் தனக்கு அவர் முதலாளி; அவரைக் குறைவாகப் பேசக்கூடாது என்பதை சங்கரன் அறிந்திருந்தான். அவன் மவுனமாகவே உடன் வந்தான்.

முருகன்தான் புலம்பிக் கொண்டே வந்தான்: 'இந்த மாடு திமிரு பிடிச்சது. வீட்டிலே அதுக்கு என்ன குறை இருக்கு? புண்ணாக்கு, தவிடு, கொழு கொழுன்னு கழுநித் தண்ணி எல்லாம் நிறையவே அதுக்கு கிடைக்குது. இரண்டு மூணு நாளைக்கு ஒருக்க அம்மா நல்ல பருத்திக் கொட்டையை அரைச்சு தண்ணியிலே கலந்து கொடுக்கிறா. திங்கிற கொழுப்பு, இதாலே சும்மா நிற்க முடியலே. ஒடி ஒடிப் போயிருது நாமதான் வேகு வேகுன்னு அலைஞ்சு திரிஞ்சு லோல்பட வேண்டி யிருக்கு...'

இதற்குள்ளாக இருவரும் வடக்குக் குளத்தை நெருங்கி விட்டார்கள். அது மானா மாரிக்குளம். மழை பெய்தால் தான் அதில் தண்ணீர் கிடக்கும். பெரும்பாலான நாட்களில் வறண்டுதான் காணப்படும். கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்து நிற்கும்.

முருகனுக்கு நண்பர்களோடு அந்தக் குளத்துக்கு வருவதில் தனி உற்சாகம் உண்டு. கருவேல மரங்களில் பிசின் வடிந்து மினுமினுவென்று மிளிரும். அதை சேகரித்து, புட்டிகளில் போட்டு நிரூற்றி, அருமையான கோந்து தயாரிப்பதில் அவனுக்கும் மற்றப் பையன்களுக்கும் தனி மகிழ்ச்சி. கிழிந்த நோட்டு, புத்தகம், மற்றும் கவர்களை ஒட்டக்கூடிய முதல் தரமான பசை அது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.

மழைகாலத்தில், குளத்தில் நீர் பெருகிக் கிடக்கிற நாட்களில், சகலரகமான பையன்களும் அங்குதான் கூடிக் குட்டைப்புழுதி பண்ணுவார்கள். குளத்தின் நடுவில் அகலமான கிணறு ஒன்று இருந்தது. அதற்கு உயரமான சுவர்கள் கட்டப்பட்டிருந்தன. ஒரு மூலையில் துலாக்கல் ஒன்று உயர்ந்து நின்றது. மழைநாட்களில் கிணற்றிலும் தண்ணீர் பெருகிக் கிடக்கும்.

பையன்கள் சுவர் மீதும், துலாக்கல் மீதும் ஏறிநின்று தண்ணிரில் குதித்து விளையாடுவார்கள். ஒரே ஜாலிதான். ஒருவன் நீண்ட குரலில் பாட்டு மாதிரிக்கத்துவான்.