பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 வல்லிக்கண்ணன் கதைகள்

ரோடின் திருப்பத்தில் வேகமாக வந்த லாரி, மோட்டார் பைக் உல்லாசிகளை மோதித் தள்ளி, சக்கரத்தால் இளைஞனைக் காயப்படுத்தி, ரத்தம் ஓட வைத்தது. அந்த பெண் தூக்கி ஏறியப் பட்டிருந்தாள். கூச்சல்... கும்பல். குழப்பம்.

ஒரு கணத்திற்கு முன்பு சுயம்பு மட்டும் தெளிவாகத் தன்னுள் கண்டறிந்த கோர விபத்து உண்மை நிகழ்ச்சியாகி பயங்கரமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது, பலரும் பார்க்கும்படியாக...

சுயம்புவின் உள்ளில் ஒரு அதிர்ச்சி. இதுதான் அவனுக்கு முதல் அனுபவம் என்றில்லை. தனக்கு இப்படி ஒரு அதீத சக்தி இருக்கிறது என்பதை அவன் புரிந்து கொள்வதற்குள் இரண்டு மூன்று அனுபவங்கள் அவன் கண்முன்னே நடந்துவிட்டன.

சுயம்பு தெருவழியே போய் கொண்டிருந்தான். காலை ஒன்பது - ஒன்பதரை மணி இருக்கலாம். ஒளிமயமாக சிரித்தது உலகம். பரபரப்பாக இயங்கினர் மனிதர்கள். உலகமே இனியதாக தோன்றியது அவனுக்கு. கலகல வென்று ஒரு சிரிப்பொலி அவன் கவனத்தை கவர்ந்தது. அங்குமிங்கும் பார்த்தான். ஒரு வீட்டு மாடி பால்கனியில் ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். அவள் தான் சிரித்தாள். அவளுக்கு ஐந்து அல்லது ஆறு வயசிருக்கும். பளிடும் நவீன ஆடையில் ஒரு அழகுப் பூ மாதிரி மிளிர்ந்தாள் அவள். அவளுக்கு வேடிக்கை காட்டியபடி பெரிய பெண் ஒருத்தி ஒளிந்தும், மறைந்தும் இயங்கிக் கொண்டிருந்தாள்.

அந்த காட்சி சுயம்புவை பரவசப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவன் பரபரப்பு அடைந்தான். அவன் உள்ளத்தில் ஒரு பதைப்பு. பால்கனியில் நின்ற சிறுமி தலைகுப்புற விழுந்து கிடக்கிறாள் கீழே தரை மீது. அவள் மண்டையில் அடிபட்டு ரத்தம் செவேலெனப் பளிச்சிடுகிறது. அந்நேரத்திய அந்த முகம்...

திடுக்கிட்ட சுயம்பு தலையை உலுக்கிக் கொண்டு பார்த்தான். பால்கனி பால்கனியாகவே இருந்தது. நீலநிற கவுன் அணிந்து, சந்தோஷத்தின் குறள் உருவமாய் காட்சி தந்த சிறுமியும் அப்படியே தான் இருந்தாள்.

'நல்ல வேளை!' என்றது சுயம்பு மனம். அவன் சில அடிகள் கூட நகர வில்லை. .'ஐயோ, அம்மா... பிள்ளை பிள்ளை' என்று அலறல்கள் வெடித்தன. அவன் திரும்பிப் பார்த்தான்.

சிறுமி கீழே ரோடில் விழுந்திருந்தது, வீட்டு வாசலின் முன்பு, பால்கனியின் மரத்தடுப்புகள் பெயர்ந்து விழுந்து கிடந்தன.