பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 வல்லிக்கண்ணன் கதைகள்

நாற்காலியை தள்ளிப்போட்டு உட்காரும்படி எச்சரித்திருக்கலாமோ? அவன் மனமே அவனை குடைந்தது. ஆனால், என்ன காரணம் சொல்லி அவரை எச்சரித்திருக்க? இப்படி எனக்கு தோணிச்சு என்றால் மற்றவர்கள் நம்பியிருப்பார்களா? பைத்தியம் என்று பரிகசித்திருப்பார்கள் என்றும் அவன் எண்ணிக் கொண்டான்.

எனினும், இந்த அனுபவத்தின் நினைப்பு அவனுள் வேதனைக் குளவியாய் குடைந்து கொண்டுதான் இருந்தது.

இதுவும் இதுபோன்ற இதர அனுபவங்களும் அவனை சதா எண்ணி உளைய வைத்தன. தனக்கு, சாதாரணமாக மற்றவர்களுக்கு இல்லாத, ஒரு அதிசய சக்தி இருப்பதாக அவனுக்கு பட்டது. அது, அவனுக்கு கிளர்ச்சி ஊட்டியது. அதேசமயம் அச்சம் தருவதாகவும் இருந்தது. அதுபற்றி நண்பர்களிடம் பேசவும் தயங்கினான் அவன். மற்றவர்கள் நம்பமாட்டார்கள், கேலி பண்ணுவார்கள் என்ற பயம் அவனுக்கு. நல்ல மருத்துவரை பார்; உளயியல் நிபுணரை கலந்து ஆலோசி என்றெல்லாம் கலவரப்படுத்துவார்கள் எனும் எண்ணமும் உண்டாயிற்று.

'சரி. இருப்பது இருந்துவிட்டுப் போகட்டும். இதனால் எனக்கு ஒன்றும் தொல்லை இல்லையே,’ என்று சுயம்பு தன் மனசை தேற்றிக் கொண்டான்.

அவன் படித்தவற்றில் தற்செயலாக அவன் பார்வையில் பட்ட சில ஆங்கிலக் கட்டுரைகள் அவனுக்கு சிறிது தெளிவு தந்தன. மனிதரின் உள்ளுணர்வு பற்றியும், உள்ளுணர்வின் அபூர்வ சக்தி குறித்தும், பார்வைப் புலனுக்கு மேற்பட்ட அதிகப்படி கண்டுரைக்கக் கூடிய தனி ஆற்றல் பற்றியும் அவை பேசின. சிலரது விந்தை அனுபவங்கள் குறித்தும் அவை விவரித்தன. -

இருக்கலாம்; எனக்கு ஏன் இது திடீரென வந்து சேர்ந்தது என்று சுயம்பு குழம்பித் தவித்தான். பிறகு, இது வந்தது போல் திடீரென மங்கி மறைந்துவிடவும் கூடும் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.

அவனுக்கு புரியாத ஒரு விஷயமாக வியப்பளித்தது இன்னொரு உண்மை. இப்படி "அதீதப் புலன் உணர்வு பிடித்துக் காட்டுகிற அனுபவம் எல்லாம் சோக நிகழ்ச்சிகளாக, கோர விபத்துக்களாகவோ இருக்கின்றனவே! மங்களகரமான சந்தோஷங்கள் நிறைந்த காட்சிகள் என் உள்ளுணர்வில் முன்கூட்டியே பளீரிட மாட்டாவோ?’ என்று சந்தேக அலைகள்