பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 வல்லிக்கண்ணன் கதைகள்

என்பதற்கு புன்னைக்காடு மகிழ்வண்ணம் பிள்ளையின் அனுபவம் சுவாரஸ்யமான உதாரணமாக விளங்குகிறது.

வானைத் தொடுவது போல் நெடிது உயர்ந்து, முடிந்த வரையில் எவ்வளவு நிலப்பரப்பை வளைத்து பிடித்துக் கொள்ள இயலுமோ அவ்வளவுக்கு நீண்டு நெளிந்து கிடக்கும் மலைத் தொடரின் அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள சிற்றுார்களில் ஒன்று புன்னைக் காடு.

மலை அடிவாரத்தின் அருகாமையில் உள்ள ஊர்களுக்கு இயல்பாக ஏற்படக்கூடிய வசதிகளும் வசதிக்குறைவுகளும் புன்னைக்காடு ஊருக்கும் உண்டு.

இரவு நேரங்களில் மலையிலிருந்து கொடிய மிருகங்கள் ஊருக்குள் புகுந்து, தங்களால் ஆன நஷ்டங்களை விளைவித்துச் செல்லும். கோழிகளைத் திருடித்தின்னும் பிராணிகளும் ஆட்டுக்குட்டிகளைத் துக்கிச் சென்றும் பெரிய ஆடுகளை அடித்துக்கொன்றும் சேதம் விளைவிக்கும் 'கடுவா’ போன்ற கொடிய மிருகங்களும் அந்த ஊரில் அடிக்கடி வந்து போகும். பெரிய மலைப்பாம்பு அபூர்வ அதிதியாக வருகை புரிந்து விட்டுப் போவதாகவும் ஊர்க்காரர்கள் சொல்வது உண்டு. காட்டுப் பன்றிகள் அவ்வப்போது வந்து, பயிர் களைப்பாழ் பண்ணி, பண்படுத்தியநிலத்தை நாசம் செய்து விட்டுப் போகும். கரடிகளும் எப்போதாவது மலை மீதிருந்து கீழேயிறங்கி ஊருக்குள் புகுந்து, தமது வருகையைப் பதிவு செய்து விட்டுத் திரும்பிச் செல்லும்.

அதனால், 'காட்டு மிருகங்களிடம் பயம், என்பதும் அந்த ஊருக்குப் பொதுவான ஒரு குணமாகி விட்டது. இருட்டுக் காலங்களில் இந்த பயம் அதிகமாக இருக்கும். 'பட்டப்பகல் போல' நிலா பளிரென அடிக்கிற இரவு நேரங்கிளல் கூட அவ்வூர் வாசிகள் எட்டு மணிக்கு மேலே கதவுகளை திறந்து போட்டிருப்பதில்லை. வெளியே படுத்துறங்க அஞ்சுவார்கள். அவனை கரடி அடித்து விட்டது; இவனை கடுவா கொன்று போட்டது; புலி ஊருக்குள் வந்து அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டது என்பன போன்ற பேச்சுக்கள் புன்னைக்காடு ஊரைப்பொறுத்த வரையில் சர்வசாதாரண விஷயங்களாகவே ஒலித்தன.

எனவே, ஊர்க்காரர்கள் வெளியே நடமாடுகிறபோது அரிவாள், வேல்கம்பு, ஈட்டி தடி என்று எதையாவது தூக்கிக் கொண்டே திரிவார்கள். வசதியும் செல்வாக்கும் பெற்றிருந்த சிலர் துப்பாக்கிக்கும் ரிவால்வருக்கும் லைசென்ஸ் வாங்கி அவற்றை வைத்திருந்தார்கள்.