பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244 வல்லிக்கண்ணன் கதைகள்

அவரால் நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண் கல்யாணமாகி, கிடைத்த வாழ்வில் திருப்தி அடையாமல், ஸ்டைல் மாஸ்டர் ஒருவனோடு ஓடிப்போய் விட்டாள். ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஆகவே இல்லை. அவள் மெலிந்து இளமை இன்பங்களை நுகர முடியாமல் போன ஏக்கத்தினால் ஹிஸ்டீரியா நோயில் சிக்கி அவதிப்பட, அவளுக்குப் 'பேய் பிடித்திருக்கிறது: பைத்தியம் கண்டிருக்கிறது’ என்று கடுமையான சிகிச்சைகள் நடைபெற்று வந்தன.

'போதும்! போதும்' என்று அலறியது ஞானப்பிரகாச உள்ளம். அப்பொழுதுதான் அவருடைய சிந்தனை சீறியது. 'விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது சரியாக இருக்கலாம். ஆனால், மனித வாழ்க்கையில் இது பொய்த்துத் தான் போகும்!' என்று. மனிதருக்கு வாழ்வு நல்ல வாழ்க்கையாக அமைவதற்கான பெரும் மாற்றங்கள் ஏற்படாத வரையில் இது இப்படித்தான் முடியும் என்றும் அது முனகிக் கொண்டது.

(சாந்தி:-1970)



காதல் அதிர்ச்சி


'டாக்சி வாடகைக்கு வருமா?' ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த சந்திரன், அருகில் ஒலித்த குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான்.

அவனது பதட்டத்தைப் பார்த்தோ - அல்லது மனத்தில் தோன்றிய ஏதேனும் ஒரு எண்ணத்தினாலோ - முகத்தில் சிரிப்பின் ரேகை நெளிய அவனையே கவனித்தபடி நின்ற இளம் பெண்ணை அவன் ஒரு தடவைதான் நோக்கினான். 'ஊம்’ என்று சொல்லிக் கதவைத் திறந்து விட்டு, மீட்டரை இயங்கும்படிச் செய்த பிறகு, தனது இடத்தில் அமர்ந்து, தயாரானான்.

அதற்குள் அவளும் காரில் ஏறி அமர்ந்தாள், கதவைச் சாத்தினாள். 'கொஞ்சம் பலமாக அடித்துச் சாத்தனும்’ என்று டிரைவர் கூறியதைக் கேட்டு, அவ்வாறே செய்தாள்; போக வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னாள். அதன் பிறகு அவள் பேசவில்லை. -

அவனும் பேசவில்லை. ஆனால் அவன் மனம் அவளைப் பற்றி எண்ணத்தான் செய்தது. தனக்க முன்னால் உள்ள சிறு கண்ணாடியில் அவள் உருவம் படிவதை அவன் கண்கள்