பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றங்கரை மோகினி 257

னான். அவனுக்குப் பின்னால் சற்று தள்ளி, ஒரு மரத்தடியில் ஒரு பெண் நின்றதைக் கண்டு அவன் திகைப்பே கொண்டான்.

தனது எண்ணம் உடனடியாக இவ்வாறு பலித்திட முடியுமா? அல்லது, கனவின் உருவெளித் தோற்றம்தானா அது? அவன் விழித்துக்கொண்டே கனவு காண்கிறானோ? அன்றி. சித்தம் சிருஷ்டித்து விளையாடுகிற பிரமைதானா?

கண்களை விரலால் கசக்கி விட்டு, அவன் வெறித்து நோக்கினான். அவன் கண்டது வெறும் பிரமையோ, பகற்கனவோ அல்ல என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டது.

அவள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள், உயிர் பெற்ற சிலைபோல. "நிலவு செய்யும் முகமும், காண்போர் நினைவழிக்கும் விழி"களும் பெற்ற இந்த அழகி இங்கே திடுமென எப்படித்தான் வந்தாளோ என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று.

எழில் கொலுவிருக்கும் அருமையான இடம். குளுமை நிறைந்த சூழல், இந்த அற்புதமான இடத்தில் கண்ணுக்கு விருந்து நிறைய உண்டு. ஆனாலும், ஒரு குறை. அழகுப் பாவை ஒருத்தி அருகே இல்லையே. அது பெரிய குறைதானே? களி துலங்க நகைத்து, குழறு மொழி பேசி, பொழுதைப் பொன்னாக்கத் துணை புரியும் அழகி ஒருத்தி உடன் இருந்துவிட்டால், இனிமை அதிகரிக்கும்மே என்று அவன் எண்ணினான்.

எண்ணம் பிறந்து இரண்டொரு நிமிஷங்கள் கூடப் பறந்திரா. அவன் எண்ணத்தின் விளைவே போலும் அவன் பின்னே சிரிப்பொலி சிந்தி நின்றாளே பெண் ஒருத்தி!

இந்தக் காலத்திலும் அதிசயங்கள் நிகழத்தான் செய்கின்றன: மகாதேவன் மனம் தந்த குறிப்பு இது. -

பிற்பகல் நேரம். மணி என்ன, ஒன்றரை அல்லது இரண்டு இருக்கும். வெயில் கடுமையாகக் காய்ந்தது. ஆனால், அதன் உக்கிரம் அந்த இடத்தில் எடுபடவில்லை. பார்வைக்கும் உள்ளத்துக்கும் இதம் தரும் குளுமையான பிரதேசம் அது. காவிரி ஆற்றின் நடுவில் அமைந்திருந்தது.

"ஆகா, இனிமை, அழகு அழகு!" என்று சொக்கிச் சுவைத்தது அவனது ரசிக உள்ளம்.

ஓடும் நீரின் விம்மல்களும் அசைவுகளும் வெயிலில் தனிப் பளபளப்பு காட்டி நடனமிடுவதாகத் தோன்றியது. தூரத்தில் மேலேறி நெளியும் புகைச் சுருள்கள்போலும், அருவங்களின் ஆனந்தக் குதிப்பே போலும், ஆடிக்கொண்டிருக்கும் கான்ல்