பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258 வல்லிக்கண்ணன் கதைகள்

தோற்றங்கள். அவன் இருந்த இடத்தில் ஊர்ந்த குளுமையான காற்றின் அசைவுக்கு ஏற்ப மரங்களின் இலைக் கூட்டங்கள் சித்திரித்த நிழற்கோலம்...

இவ்வாறு எத்தனையோ இனிமைகளைக் கண்டு வியந்து கொண்டிருநத மகாதேவன் உள்ளத்தில் இயல்பாக அந்த ஆசை அரும்பியது. "இனிமைக்கு இனிமை சேர்க்க, பக்கத்தில் ஒரு பெண் இருக்கலாம்!” என்று. -

அந்த எண்ணம் உண்மையாகவே நிறைவேறி விட்டதே!

அந்திமந்தாரைபோல் பளீரெனத் திகழும் பர்ப்பிள் நிறப் புடவை. வான் நீல வர்ணரவிக்கை. அவள் உடல் வனப்பை எடுத்துக் காட்டும் பொருத்தமான உடைதான். அழகு முகம். அதில், உணர்வின் ஊற்றுக்களாய் குறு குறுத்தன எழில்நிறைந்த கண்கள். சிரிப்பில் நெளியும் சிங்கார உதடுகள்...

அந்தப் பெண்ணின் அழகு வடிவத்தை வியந்து ரசித்துக் கொண்டிருந்தான் அவன்.

அவள் மெது மெதுவாக அசைந்து நகர்ந்து வந்தாள். அவனைப் பார்த்து, "ரொம்பவும் தெரிந்தவள்போல்’’ சிரித்ததாக அவனுக்குப் பட்டது.

"ரொம்ப நேரமாக இங்கேயே இருக்கிறீர்களா?" என்று திடீரெனக் கேட்டாள் அவள்.

அதிசயமான பெண்தான் இவள் என்றுதான் நினைக்க முடிந்தது அவனால். "ஊம். நான் வந்து ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாகுது” என்றான்.

'என்னாலே சீக்கிரமா வரமுடியலே. அம்மாடி! இப்பவாவது வர முடிந்ததே!' என்றவள், எதையோ எண்ணி பயப்படுகிறவள்போல் உடலைச் சிலிர்த்துக்கொண்டு, மிரள மிரள விழித்தாள். உடனேயே அர்த்தம் இல்லாமல், அவசியம் இல்லாமல் சிரித்தாள். அவள் சிரிப்பின் கலிரொலி இன்னிசையாய், கவிதைத் துள்ளலாய்ப் பரவசப்படுத்தியது அவனை.

அவள் விடுவிடென்று நடந்தாள். அங்கு ஒரு புறத்தில் படிக்கட்டு நீளமாக வரிசை வரிசையாக அமைந்திருந்தது. அதில் அவள் குதித்துக் குதித்து இறங்கினாள். தண்ணிரில் அடி எடுத்து வைத்ததும் 'ஐயோடி!" என்று கத்தினாள்.

அவன் பயந்து விட்டான். கால் சறுக்கி அவள் விழுந்திருப்பாளோ என்று பதறி ஓடினான்.

அவள் ஜம்மென நின்று கொண்டுதானிருந்தாள். சிரித்தாள். "தண்ணீர் ஜில்னு இருக்குது. ஐஸ் மாதிரி. அது தான்" என்று சொன்னாள்.