பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிர்ச்சி 269

கனவு" - திக்கித்திணறிச் சொன்னார் அவர். இன்னும் பயத்தின் பிடியிலேயே அவர் இருப்பதாகத் தோன்றியது.

'உத்திரத்துக்கு அடியிலே படுத்திருக்கீங்க. அதுதான். உத்திரத்துக்கு நேர்கீழே படுத்துக்கிடந்தால் இப்படித்தான் கண்ட கண்ட சொப்பனம் எல்லாம் வரும்’ என்று உறுதியாய்ச் சொன்னார் ஒருவர்.

'வடக்கே தலைவச்சுப் படுத்திருந்திகளா, மாமா? அப்ப தான் சரியான துக்கமும் இருக்காது; மோசமான சொப்பனங்களும், தோணும்' என்று அறிவித்தாள் ஒர் அம்மாள்.

மணியைப் பார்த்தார் ஒருவர்.

சரியாகப் பன்னிரெண்டு!

நடுச்சாம நேரம். பேய்கள் உலாவரும் வேளை.

'ஆ அதுதான்!' என்று மர்மமாகச் சொல் உதிர்த்தார் ஒரு பெரியவர். 'இந்த மச்சிலேயே ஒரு பொம்பிளை ஒரு சமயம் தூக்குப் போட்டுச் செத்துப் போனா. அவ ஆவி இங்க தான் சுத்திக் கிட்டுத்திரியுது. அது தான் இவரைத் தொந்தரவு செய்திருக்கும்' என்றார்.

"அப்படித்தான் இருக்கும்" என்று மற்றவர்கள் ஒத்து ஊதினார்கள்.

'இன்னும் நேரம் நிறையக் கிடக்குது. தூக்கத்தைக் கெடுத்து இருப்பானேன்? எல்லாரும் கீழே போய்ப் படுப்போம்' என ஒருவர் நல்ல யோசனை சொன்னார்.

மாமா என்று பலரால் அழைக்கப்பட்ட நபருக்கும் அந்த யோசனை கூறப்பட்டது. அவரும் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டியிருந்தது.

அனைவரும் கீழே போனார்கள். வசதியாய்ப் படுத்தார்கள். பயங்கரமாகக் கத்தி அனைவரையும் பதறி எழச் செய்த நபரும், உத்திரத்தின் கீழே வராத ஒரு இடத்தில், கிழக்கும் மேற்குமாய், கிழக்கே தலைவைத்துப் படுத்தார்.

தூக்கம் உரிய வேளையில் ஒவ்வொருவரோடும் உறவு கொண்டது. பயந்து அலறியவரும் தன்னை அறியாமலே தூக்கத்தில் ஆழ்ந்து விட்டதாகத் தோன்றியது.

அவருக்கு நாற்பது வயதுக்குள் இருக்கும். ஆரோக்கியமானவராகத் தான் தென்பட்டார். மனஉளைச்சல் மனிதனைப் படுத்திக் கொண்டிருந்ததோ என்னவோ!

சுவர்க்கடிகாரம் இரண்டு மணி என அடித்துச் சொன்னது.